பாடல் எண் :4253

தூநுறு மலர்தர ளம்பொரி தூவிமு னிருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கண் மங்கல நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரு நண்பரு மாளிகை நடுவு புகுந்தனர்.
25
(இ-ள்) தூநறும்.....தூவி - தூய மணமுடைய மலர்களையும் முத்துக்களையும் பொரியினையும் கலந்து தூவி; முன்.....விளம்பிட - முன்னே இரண்டு பக்கங்களிலும் நான்மறைகளும் வல்ல முனிவர்கள் மங்கலமுடைய நன்மொழிகளைச் சொல்ல; மேல்நிறை...குடை - மேலே வெண் கொற்றக்குடை நிறைந்த நிழல் பரப்ப; வீசிய கவரி மருங்குற - வீசப்படும் சாமரைகள் பக்கங்களிற் பொருந்த; வானவர் தலைவரும்..புகுந்தனர் - சேரனாரும் அவரது தோழராகிய நம்பிகளும் அரண்மனையின் நடுவுட் புகுந்தருளினர்.
(வி-ரை) முன் 4250-ம் பாட்டில் இருவரும் யானைமீதேறிவரத் தொடங்கியதுமுதல் நகர்வாயிலை யடையும்வரை உள்ள சிறப்புக் கூறினார்; நகரவாயிலினின்றும் நகரத்தின் பல தெருவுகளையும் தாண்டி அரசர் தெருவு புகும்வரை உள்ள சிறப்பினை மேல் (4251) ஒரு பாட்டாலும், அரசர் தெருவினூடுவந்து திருமாளிகை வாயிலை அணைந்தவரை உள்ள சிறப்பு (4252) ஒரு பாட்டாலும் உரைக்கப்பட்டன; இப்பாட்டில் அரண்மனையினுள் புகும் சிறப்புக் கூறுகின்ற அமைதி கண்டுகொள்க.
நான்மறை.....விளம்பிட - இவை அரண்மனையினுட் புகும்போது மறைமுனிவர்கள் நம்பிகளைப் பல மங்கல மொழிகளால் அவர் பெயரைக் கூறி வாழ்த்தியவை.
முன் “ஆரண மொழிகள்.......அந்தணர்Ó - (4251) என்றது வேத மொழிகளுடன் நம்பிகளை நகரவாயிலின் குதூகலத்துடன் அந்தணர் எதிர்கொண்டு தெருவில் உடன் போந்த நிலை. முன் ஆரண மொழிகள் என்றும், இங்கு மங்கல நாம நன்மொழிகள் என்றும் கூறியது காண்க. நாமங்களைப் பற்றி (332)ம் பிறவும் பார்க்க.
தூநறுமலர் தரளம் பொரி - இவற்றைக் கலந்து முன் தூவி வாழ்த்துதல் மங்கல வரவேற்பு மரபு. தரளம் - முத்துக்கள் மலைநாட்டில் மிக உளவாகும் நிலைபற்றி முன் விறன்மிண்ட நாயனார் புராணத்துள் “வாரி சொரியுங் கதிர்முத்தும்Ó (692) என்ற திருப்பாட்டில் மலைநாட்டுச் சிறப்புக் கூறும் வகையால் ஆசிரியர் கூறியருளியதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. மணிகளுள்ளே சிறப்புடைமை பற்றியும், அந்நாட்டின் மிகுதிபெறக் கிடைக்கும் நிலைபற்றியும், பெரியோர்களை வாழ்த்தி வரவேற்கும்போது மணிகளையும் மலர்களையும் தூவும் நிலைபற்றியும், இங்கு முத்துக்களைத் தூவுதல் கூறப்பட்டது. திருவாரூர்த் தியாகேசப் பொருமானாரது எழுச்சியில் பொற்பூக்களைக் கலந்து தூவுதல் இன்றும் காண நிகழும் காட்சியாகும்.
இருபுடையின்கணும் - நம்பிகளும் சேரலனாரும் திருமாளிகையின் நடுவுட்புகும் போது மறை முனிவர்கள் இருபுறமும் அணிவகுத்தாற்போல் நின்று மலர் முதலியன தூவி நம்பிகளது பெயர்களைக் கூறி வாழ்த்தினர் என்பது.
மேல் வெண்குடை நிறை நிழல்செய - என்க; கவரி வீசி என்னாது வீசிய கவரி என்றது கவரிகள் தனித்துத் தோன்றாது அவை இடைவிடாது வீசியநிலையே காணப்பட்டது என்றதாம்; வீசிய - வீசப்பட்ட எனச் செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது. இவ்வாறு குடைகவித்தும் கவரி வீசியும் விளக்கேந்தியும் கோயில்களிலும் மாளிகைகளிலும் செல்லும் நிலை இன்றும் மலைநாட்டில் நிகழ்வது காணலாம்; மருங்குற - கவரிகள் (சாமரைகள்) இரண்டு பக்கங்களில் நின்று வீசப் பெறுவன
வானவர் தலைவர் - சேரனார்; சேரர்களுக்கு வானவரம்பர் என்று பெயர் கூறுதல் மரபும் வழக்குமாம். “பெருவானவ ரம்பனார்" (3904). நண்பர் - நம்பிகள்; "சேரமான் றோழர்" 3813 பார்க்க; மாளிகை - அரண்மனை.
இருபுடை எங்கணும் - என்பதும் பாடம்.