பாடல் எண் :4254

அரியணை யதனில் விளங்கிட வடன்மழ விடையென நம்பியை
வரிமல ரமளி யமர்ந்திட மலையர்க டலைவர் பணிந்துபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன வுரைமுடி விலவென முன்செய்து
பரிசன மனமகி ழும்படி பல பட மணிநிதி சிந்தினர்.
26
(இ-ள்) அரியணை...பணிந்துபின் - நம்பிகளைச் சிங்காசனத்தில் வண்டுகள் மொய்த்த மலர்கள் பரப்பிய பூந்தவிசிலே வல்லமையுடைய விடைபோல விளக்கம் பொருந்த வீற்றிருக்கும்படி மலைநாட்டவர்களுக்கு அரசராகிய சேரனார் வணங்கிவேண்டிக்கொண்டு அதன்பின்னர்; உரிமை........முன் செய்து - விரும்பியனவாகிய நல்ல பூசைகளைச் சொல்லளவிலடங்காதன என்னும்படி முன்னே செய்து; பரிசனம்....சிந்தினர் - பரிசனத்தவர்கள் மனம் மகிழும்படி பலவாறாக மணிகளை வாரி வழங்கினர்.
(வி-ரை) அரியணையதனில் - விடை என - விளங்கிட - அமர்ந்திட - நம்பியைத் - தலைவர் - பணிந்து - என்று, கூட்டுக; அரியணை - சிங்காதனம்; அரியணை மீதிருத்துதல் முன்னரும் (3897) காண்க. சிங்கக் கால்கள் போல அமைப்புடையவை. விடை என விளங்கிட - வீரமும், வெற்றிப்பாடும், இளமையும் என இவை மிக்குயர்ந்த தோற்றங் குறிக்க விடை என என்றார். “வென்றி யடல்விடை போனடந்துÓ (275); விடை என - விடையிற் போல இறைவர் விளங்கி இருக்குமிடமாக என்பதும் குறிப்பு; இருத்தற்கிடமாதல் சிவராசயோகத்தினாலே தமது திருமேனியை யிடமாகக் கொண்டு சிவம் விளங்கப் பெறுதல்; “வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாக..சிவபோக முதிர்ந்து முடுகி விளைந்ததால்Ó (4230); விடையினது இப் பெருமை பற்றிச் “சடையார் தேவர்கடம் பிராட்டி யுடனே சேரமிசைக், கொள்ளுஞ் சினமால் விடைத் தேவர் குலம்Ó (1227) என்றதும், பிறவும் பார்க்க. விளங்கிட என்ற குறிப்புமிது; நம்பிகள் எழுந்தருளி யமர்ந்ததனைச் சிவம் - விளங்குவதாகவே நாங்கள் காண என்பதாம். மலையர் - மலைநாட்டவர்கள்.
மலரமளி - அரியணைமீது அமைத்த பூந்தவிசு (மலராசனம்).
நல்வினைகள் - பாதம் விளக்கல், புகை - விளக்கு ஏந்துதல், முதலிய பூசைவகைகள். (3898 -3899).
புரிந்தன வாகிய - உரிமை நல் வினைகள் என்க. புரிதல் - விரும்புதல்; முன்னர்ப் புரிந்த - செய்த - என்றலுமாம். உரிமை - செய்தற்குரிமை. (3898).
உரை முடிவில என - முன்னர் விரித்துக்கூறியமையால் இவ்வாறு சுட்டிக் கூறி, அதனினும் மேலாக என்று கொள்ளவைத்தார்.
பரிசனம் - இருபாலும் உள்ள பரிசனங்களும், பரிசனம் மனமகிழும்படி....சிந்தினர் என்றனர், சிந்திய மணி நிதிகளைக் கொண்டு மகிழ்வோர் அவரேயாகலான். அவ்வாறு சிந்திய மணிநிதிகளை வேறு எவரும் கொள்ளும் நிலையின்மையும் குறிப்பித்தவாறு. மணிநிதி - உம்மைத் தொகை.
பலபட - பல திறப்படவும், நிறைவாகவும்; சிந்துதல் - வாரி யிறைத்தல்.
பலபடி என்பதும் - பாடம்.