பாடல் எண் :4255

இன்ன தன்மையி லுதியர்க டலைவர்தா மிடர்கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி துறையுநாண் மலைநெடுநாட்டெங்கும்
பன்ன கம்புனை பரமர்தந் திருப்பதி பலவுடன் பணிந்தேத்திப்
பொன்னெ டுந்தட மூதெயின் மகோதையிக் புகுந்தனர் வன்றொண்டர்.
27
(இ-ள்) இன்ன தன்மையில்.....உறையுநாள் -இவ்வாறாகிய தன்மையில் சேரர்களது அரசராகிய சேரலனார் இடர் நீங்கும்படி முனைப்பாடி நாட்டின் அரசராகிய நம்பிகளுடனே மகிழ்ச்சியுடன் இனிமையாகக் கூடியிருக்கும் நாள்களில்; வன்றொண்டர் - நம்பிகள்; மலைநெடு......ஏத்தி - நீண்ட மலைநாட்டில் எங்கெங்குமுள்ள, பாம்பினைப் புனைந்த இறைவனார் எழுந்தருளிய திருப்பதிகள் பலவற்றையும் சேரலனாருடனே கூட அணைந்து பணிந்துதுதித்து; பொன்நெடும்..புகுந்தனர் - பொன்புனைந்த நீண்ட பெரிய மதில் சூழ்ந்த மகோதை நகரினுள்ளே வந்து புகுந்தருளினர்.
(வி-ரை) இன்னதன்மை - முன்பாட்டிற் கூறியவாறு உபசரிக்கப்பட்ட நிலை.
இடர்கெட - ஏத்தி - என்றது இந்த இரண்டு பெருமக்களும் மலைநாட்டுப் பதிகளைச் சென்று பணிந்து ஏத்தியதனால் உலகம் இடர் நீங்கி உய்தி பெற்றது என்றதாம். “மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடப் - போதுவார்Ó (35) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; உலக முய்ந்திட என்க. இவர்களுடைய பாவனை நோக்கம் முதலியவற்றால் வரும் நன்மைகளாற் றுன்ப நீங்க என்பதாம்.
மலை........பதிபல - இவை திருச்சிவப்பேரூர் விடைக்குன்று நாதேச்சரம் (திருச்சூர் - Trichur எனப் பிழைபட மருவி வழங்குவது); வைக்கம் (கரன் பூசித்தது); திருச்செங்குன்றூர் (விறன்மிண்ட நாயனாரது பதி); சுசீந்திரம் (திருவிதாங்கூர் சீமை ) முதலாயின என்பது கருதப்படும்.
உடன் - சேரலனாருடன் கூடி. விரைவாக - அன்புடனே - என்றலுமாம்.
மகோதை - சேர அரசர் தலைநகர், அஞ்சைக்களம் - கொடுங்கோளூர்; “மகோதை யணியார் பொழி லஞ்சைக் களம்Ó (தேவா) (3751) பார்க்க.
வன்றொன்டர் ஏத்திப் புகுந்தனர் - என்க. சேரலனார் நம்பிகளைப் பின்பற்றி நீங்கா நிழல்போல உடன் சென்றமையால் சிறப்புப்பற்றி வன்றொண்டர் புகுந்தனர் என அவரொருவரது தொழிலாக உரைத்தருளினர். உடன் - ஏத்திப் - புகுந்தனர்.