பாடல் எண் :4257

கரிய கண்டர்தங் கோயிலை வலங்கொண்டு காதலாற் பெருகன்பு
புரியு முள்ளத்த ருள்ளணைந் திறைவர்தம் பூங்கழ லிணைபோற்றி
அரிய செய்கையி லவனியில் விழுந்தெழுந் தலைப்புறும் மனைவாழ்க்கை
சரிய வே “தலைக் குத்தலை மாலைÓ யென் றெடுத்தனர் தமிழ்மாலை.
29
(இ-ள்) கரிய...வலங்கொண்டு - நீலகண்டரது கோயிலினை வலமாகச் சுற்றிவந்து; காதலாற் பெருகன்பு புரியும் உள்ளத்தார் - பெருவிருப்ப மிக்கோங்குதலாற் பெருகிய அன்பு நிலையே சிந்தையினை முழுதும் இடங்கொள்ளப் பெற்றவராகிய நம்பிகள்; உள் அணைந்து....போற்றி - உள்ளே சேர்ந்து இறைவரது பூப்போன்ற திருவடிகளிரண்டினையும் துதித்து; அரிய......எழுந்து - அருமையாகிய செயலினாலே நிலமிசை விழுந்து எழுந்து; அலைப்புறும்.....தமிழ்மாலை - அலைத்தல் பொருந்திய இவ்வுலகத்து மனை வாழ்க்கை தம்மைவிட்டு நீங்கி ஒதுங்கி யிடவே “தலைக்குத் தலைமாலைÓ என்று தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினைத் தொடங்கினர்.
(வி-ரை) காதலால்....உள்ளத்தார் - இஃது அன்று கோயிலை வலங்கொண்ட பின் உள்ளணையும்போது நம்பிகளது மனநிலை, புரியும் உள்ளத்தர் - இடைவிடாத நினைப்பினாலே உள்ள முழுதும் விழுங்கிய நிலையினர்; “ஒன்று சிந்தைநம் மூரன்Ó (4260) என்பது காண்க.
போற்றி - பலவாறும் துதித்து; இஃது இறைவரது புகழ்களைக் கீதம் முதலியவற்றால் எடுத்துச் சொல்லி வணங்குதல். பதிகம் பாடுதல் வேறு; அது மேல் வருதல் காண்க.
அரிய செய்கையில் - செய்தற்கரிய தன்மையில் நின்று; இவ்வுலக வாழ்விலே தமக்குப் பெரிதும் அன்புடைய தேவிமாரிருவரது இன்பமும், முடியுடை மன்னராகிய சேரனாரது அரசச் செல்வ வாழ்வும், “இறைகளோ டிசைந்த இன்பமும், இன்பத்தோடிசைந்த வாழ்வும்Ó, இறைவரது அருட் பெருஞ் செல்வமும் நிறைந்திருக்கப்பெற்ற நம்பிகள் அத்தகைய இவ்வுலக மனை வாழ்க்கையினைவெறுத்து முத்தி விண்ணப்பம்செய்ய வருகின்றாராதலின் அக்குறிப்புப்பட “அரிய செய்கையில்Ó என்றார். “செயற்கரிய செய்வார் பெரியர்Ó (குறள்).
அலைப்புறும் - அலைத்தலைப் பொருந்திய; அலைத்தலாவது இன்பத் துன்பங்களுக்கும் அவை காரணமாக விருப்பு வெறுப்புக்களும், அவற்றால் மீள மீளப் பிறவிக்கும், அதனால் சென்று சென்று வரும் அலைச்சலுக்கும், காரணமாதல்,
மனைவாழ்க்கை சரியவே - சரிதல் - தாமாகவே கழன்று விடுதல்; ‘உறங்கினேன் கை வெறும்பாக் கௌ'ப் பற்றுவிட்டொழிதல். மனைவாழ்க்கை - இங்கு இல்வாழ்க்கையை உள்ளிட்ட இவ்வுலக வாழ்வு முழுதினையும் உணர்த்தி நின்றது; இது பதிகத்தின் உட்குறிப்பு;. மேற்பாட்டும், பதிகம் 8-வது பாட்டும் பார்க்க. சரியவே - சரிந்திடற்பொருட்டே. சரிதலாலே என்றலுமாம்.
தலைக்குத் தலைமாலை என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. எடுத்தல் - தொடங்குதல்.