பாடல் எண் :4260

வான நாடர்க ளரியயன் முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள் ளானையுங் கொண்டுவன் றொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ் மகோதையிற் றிருவஞ்சைக் களஞ்சேரக்
கானி லங்கொள வலங்கொண்டு மேவினார் கடிமதிற் றிருவாயில்.
32
(இ-ள்)வான நாடர்கள்.....விடைகொண்டு - அவ்வருளிப்பாட்டினைக் கேட்ட தேவர்களும் விட்டுணு பிரமன் முதலினோர்களும் முன் வணங்கி விடை பெற்றுக் கொண்டு; தூநலம்....வன்றொண்டர்க்கு - வன்றொண்டருக்காகத் தூய நன்மை விளங்கும் ஒளியுடைய வெள்ளானையினையும் உடன் கொண்டு; தேனலம்பு....கானிலங்கொள - தேன் துளிக்கின்ற சோலைகள் சூழ்ந்த மகோதை நகரத்தில் திருவஞ்சைக் களத்தினைச் சார அணுகும்போது கால் நிலத்திலே பொருந்த; வலங்கொண்டு.....திருவாயில் - வலமாக வந்து காவலுடைய மதிற்றிருவாயிலை அடைந்தனர்.
(வி-ரை) வான நாடர்கள் - தேவர் உலகத்தவர். தேவர்கள்;
தூ.....வெள்ளானை - இவ்வடை மொழிகளின் சிறப்பினால் இது அயிராவணத்தினைக் குறித்ததென்பாரு முண்டு; வன்றொண்டர்க்கு - வன்றொண்டர்க்காக;
தேன் அலம்பு - தேன் துளிக்கும்; மகோதையில் திருவஞ்சைக்களம் - மகோதை - திருக்கொடுங்கோளூரும் அஞ்சைக்களமும், பிறவும் சேரர் தலைநகர் என்பது குறிக்க மகோதையில் என்றார்;
சேரக் கால் நிலம் கொள - தேவர்கள் கால் நிலம் தோயாத தன்மையுடையவர்கள். ஆதலின் இங்குத் தாம் வந்த செயல் நிகழ்த்தலுக்காகத் திருவஞ்சைக்களம் சேரக்கால் நிலந்தோயக் கொண்டனர் என்க. இங்கு, இவ்வாறன்றி நம்பிகள் கானிலம் தோய வலங்கொண்டு என்று கூட்டியுரைத்தனர் முன் உரைகாரர். அது பொருந்தாமை உணர்ந்து கொள்க. "விண்மேற் செலும்" "விசும்பெழ" (4263-4) பார்க்க.
சோலைசூழ்ந் திருக்குமத் - என்பதும் பாடம்.