பாடல் எண் :4261

தேவர் தங்குழா நெருங்கிய வாய்தலிற் றிருநாவ லூரர்தங்
காவன் மன்னரும் புறப்பட, வெதிர்கொண்டு "கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை முடியவ ரருளிப்பா" டெனப்போற்றி
"ஏவ"லென்றபின்செய்வதொன்றிலாதவர் பணிந்தெழுந்தெதிரேற்றார்.
33
(இ-ள்) தேவர்.....புறப்பட - முன் கூறியவாறு தேவர் கூட்டங்கள் வந்து நெருங்கிய திருவாயிலின் வழியே திருநாவலூரர்களது காவலினைத் தரும் மன்னவராகிய நம்பிகளும் (வழிபாடு முற்றியபின்) புறப்பட்டு வெளியேவர; எதிர்கொண்டு......என்ற பின் - எதிர் கொண்டு திருக்கயிலையில் வீற்றிருந்தருள்கின்ற கொன்றை முதலிய பூக்கள் பொருந்தித் ததும்பும் தண்ணிய கங்கை நீரினை ஏற்ற சடைமுடியவராகிய இறைவரது அருளிப்பாடு என்று சொல்லித் துதித்து; அவருடைய ஏவல் இஃது என்று கூறியபின்; செய்வதொன்று.....ஏற்றார் - வேறு செயலொன்றும் இல்லாதவராகிப் பணிந்து எழுந்து எதிராக அந்த ஆணையினை உடன்பட்டருளினர்.
(வி-ரை) தேவர் நெருங்கிய - நெருங்கிய - முன் பாட்டிற் கூறியபடி வந்து கூடிய. வாய்தலில் - வாய்தலின் வழியாக - புறப்பட - நம்பிகள் வழிபாடு முடித்துப் புறத்தே செல்ல அணைய; வாய்தல் - இவ்வாயில் அபிமுகத்துத் திருவாயில் என்பது கருதப்படும். யானை வருதலும் நம்பிகள் புறப்படுதலுமாகிய அடையாளங்கள் இங்குப் பொறிக்கப்பட்டுள்ளன.
திருநாவலூரர்.....மன்னர் - நம்பிகள்; திருநாவலூரர் - நாவலூர் மக்கள்; மன்னர் - தலைவர்.
அருளிப்பாடு - ஆணை; கயிலை....அருளிப்பாடு - இறைவரது ஆணையினைத் தெரிவிக்கும் முறை; மரபு; மேல் 4272-ல் வருவதும் காண்க. என - என்று கூறி;
ஏவல் - "தேவரீரை யானையின் மீதேற்றிக் கொண்டு வரும்படி இறைவரது ஆணை" என்ற இறைவர் கட்டளையினை விரித்துரைத்தப்படி; என்ற பின் - என்று கூறக்கேட்ட பின்பு;
செய்வ தொன்றிலாதவர் - வேறு ஒன்றும் செயலில்லாதவராய்; ஒன்று - ஒன்றும்; முற்றும்மை தொக்கது. சிவபெருமானது நியதியின்படி வரும் காலன் முதலியோரது ஆணை வந்தபோது வேறு செயலிலாது செல்லும் நிலையிலுள்ள உயிர்கள், இறைவரது ஆணை நேரே வந்தபோது உடன்பட்டுச் செல்வதன்றி வேறென் செய்ய வல்லர்?
எதிர் ஏற்றார் - அவர் கூறிய ஆணைக்குட்டு ஏற்று நின்றனர்.