பாடல் எண் :4262

ஏற்றதொண்டரை ண்டர்வெள்ளானையினெதிர்வலங்கொண்டேற்ற
நாற்ற டங்கடன் முழக்கென வைவகை நாதமீ தெழுந்தார்ப்பப்,
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவா ருயிரெல்லாஞ்
சாற்று மாற்றங்க ளுணர்பெருந் துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.
34
(இ-ள்) தொண்டரை.....ஏற்ற - தேவர்கள் இவ்வாறு ஆணையினை ஏற்ற நம்பிகளை எதிர்வலஞ் செய்து வணங்கித் தாங் கொணர்ந்த வெள்ளானையின் மீது ஏற்ற; நாற்றடங்கடல்.....ஆர்ப்ப - நான்கு திசைகளிலு முள்ள பெரிய கடல்களின் முழக்கம் போன்று ஐவகைத் தேவ துந்துபிகளும் எழுந்து சந்திக்க; போற்றி......பொழிந்திட - துதித்துத் தேவர்கள் பூமாரி பொழிய; போதுவார்.....சார்ந்தார் - போவாராகிய நம்பிகள் எல்லாவுயிர்களும் கழறிய சொற்களை யறிவாராகிய தமது பெருந்தோழராகிய சேரமான் பெருமாணாயனாரைத் தம் மனத்தினுள்ளே நினைந்து கொண்டவாறே சார்ந்தருளினர்.
(வி-ரை) ஏற்ற - முன் கூறியவாறு அருளிப்பாட்டின் ஏவலை எதிர் ஏற்ற; தொண்டரை - நம்பிகளை;
அண்டர் - தொண்டரை - எதிர் வலங்கொண்டு வெள்ளானையின் ஏற்ற என்க.
நாற்றடங்கடல்......ஆர்ப்ப - நாற்றடங்கடல் - முழக்கு - திருவஞ்சைக் களத்தினைச் சூழ்ந்த கடலின் முழக்கு; "அஞ்சைக் களத்தினைச் சூழ்ந்த" என்பது குறிப்பெச்சம். "மலைக்கு நிகரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டலைக் குங்கடல்" (பதிகம் - 1) என்பது முதலாக நம்பிகள் பதிகத்தினுள் எல்லாப் பாட்டுக்களினும் சிறப்பித்தருளும் கடல் என்பது குறிப்பு; கடல் பெரிதும் முழங்கிற்று; அதுபோல ஐவகை நாதமும் மீது எழுந்து ஆர்த்தன என்பதாம்; மீதெழுதல் கடல் முழக்கினையும் அடக்கி மேலெழுதல்; தேவதுந்துபி முழங்குதலும் வானவர் பூமழை பொழிதலும் முதலாயின சிவனருள் வெளிப்பாடுகளின் போது நிகழ்வன. "ஓசை யைந்து மார்கலி முழக்கங் காட்ட" (750) என்றது காண்க; திருவருள் விளக்கமாவது நம்பிகள் இவ்வுலகினிற் பாசமடுத்த வாழ்க்கையை யறுத்துச் சிவனுலகிற்கு அவ்வுடலுடனே வெள்ளானையின்மீது செல்லுதல்; அரசுகள் சிவப்பேறு பெற்ற போதும் (1693) இவ்வாறே ஐவகையொலி - பூமழை முதலியவை நிகழ்ந்தது காண்க.
போதுவார் - வினைப்பெயர்; போதுவாராகிய நம்பிகள்; போதுவார் - சார்ந்தார் - என முடிக்க.
உயிரெல்லாம்.....துணைவர் - சேரலனார். கழறிற்றறிவார் என்ற பெயர்க் காரணம் பற்றி, முன்னர், "யாவும் யாருங் கழறினவு மறியும் உணர்வும்....கைவந்ததுறப் பெற்றார்" (3761) என்று உரைத்தவை காண்க. பெருந்துணைவர் - தோழர்; உயிரெல்லாம்.....உணர் - என்ற இத்தன்மையால் இங்குக் கூறியது, ஈண்டு விரைவில் அவர் அவ்வலிமையாற் றம் குதிரைக்குச் சிவமந்திரமோதி அதனை வானிற் செலுத்தி நம்பிகளுடன் கயிலைக்குச் சென்று சேரும் நிலைக் குறிப்பு உணர்த்தற்கு; பெருந்துணைவர் - என்ற குறிப்புமது; மேற்பாட்டில் உரைப்பனவும் காண்க.
பெருந்துணைவர் - இவ்வுலகில் துணையாவார் பிறரெல்லாம் இவ்வுலகத் தொடர்புடனொழிகுவர்; இவர், அவ்வாறன்றிக் கயிலை செல்லும் நிலையிலும் பின்னர் அங்கு நிலையாக வீற்றிருக்கும் நிலையிலும் பிரியாது துணைவராயிருக்கும் தன்மை குறிக்கப் பெருந்துணை என்றார்.
மனத்தினிற் கொடு - நினைத்துக்கொண்டு; எண்ணிக்கொண்டு; சிவபெருமானாரது அருளிப்பாடுடைய ஏவல் பெற்றதனால் உடனே ஏற்றுச் செல்ல வேண்டிய நிலையினின்றாராதலின், கொடுங்கோளூரின் "தூய மஞ்சனத் தொழிலினிற் றொடங்கிய" (4256) தமது தோழனார்பாற் சென்றறிவித்து விடைபெற இயலாதவராயினர் நம்பிகள். ஆதலின் அவரை மனத்தினில் எண்ணிக்கொண்டு சார்ந்தார்; உலகினிற் பாசமடுத்த வாழ்க்கையை யறுக்க வேண்டி, "வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டடியேன்" (பதிகம்) என்ற நம்பிகள் இத்துணைவரை மட்டில் மனத்தினிற் கொடு சென்றமை என்னை? இஃது உலகினிற் பாசமாகாதோ? என்னின்; ஆகாது; இவரது தொடர்பு பாச சம்பந்தமான தொன்றன்று; இறைவர் கூட்டுவிக்க நிகழ்ந்தது; பதிசம்பந்தப் பட்ட அன்பு காரணமாக நிகழ்ந்தது ஆகலான் என்க. தமது தேவியர்களிருவரையேனும், பிறர் எவரையேனும், மனத்தினிற் கொடு செல்லாமையும் காண்க.