பாடல் எண் :4263

சேரர் தம்பிரான் தம்பிரான் றோழர்தஞ் செயலறிந் தப்போதே,
சார நின்றதோர் பரியினை மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களி றுகைத்துவிண்மேற்செ லுமெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரி னின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியுமுன் செலவிட்டார்.
35
(இ-ள்) சேரர்.....அறிந்து - சேரமான் பெருமானார் தம்பிரான் றோழராகிய நம்பிகளது செயலினை அறிந்து அப்பொழுதே; சார....சார்வார் - சார நின்றதாகிய ஒரு குதிரையின் மேற்கொண்டு திருவஞ்சைக் களத்தினைச் சார்வாராக; வீர.....கண்டார் - வீரமுடைய வெள்ளானையினைச் செலுத்தி ஆகாயத்தின் மேலே செல்லும் மெய்த் தொண்டராகிய நம்பிகளைக் கண்டனர்; பாரின்.....செலவிட்டார் - நிலத்தில் நிற்கலாற்றாராய்த் தமக்கு முன்னே விரைவாய்ச் சென்ற தமது மனத்தினோடு குதிரையும் முன்பு செல்லும்படி விட்டனர்.
(வி-ரை) சேரர் தம்பிரான் - தம்பிரான் - அரசர், மேலோர் முதலியோர்க்கு மலைநாட்டில் இன்றும் வழங்கும் மரபு வழக்குப் பெயர்; தம்பிரான் - தம்பிரான்றோழர் - சொற்பின் வருநிலை; தம்பிரான் தோழர் - இங்குத் தம்பிரான் - என்றது இறைவரது பெயராகவும், இடநோக்கி அரசர் பெயராகவும் சிலேடை வகையால் உரைக்க நின்றது; இது குறிக்கச் சேரர் தம்பிரான் என்றவாற்றாற் கூறிய குறிப்பும் காண்க. தம்பிரான் (தோழர்) - அரசர் தோழர் எனக் கொள்ளும்போது தமது தோழர் என்க.
செயல் அறிந்து - செயல் - நம்பிகள் மனத்தினுட் கொண்ட செயல்; அவர் தம்மைப் பிரிந்து திருவஞ்சைக்களம் போந்து முத்தி விண்ணப்பம் செய்ததும், வெள்ளானையினைக் கொண்டு தேவர்கள் போந்து இறைவரது அருளிப் பாட்டினைக் கூறியதும், அதனை ஏற்று, அவர் வெள்ளானையின் மேற்கொண்டு தம்மை மனத்தினுட் கொண்டவாறே விண்மேற் செல்வதுமாகிய எல்லாம் அறிந்து, இத்துணையும் செயல் என்ற வொருசொல்லாற் பெற வைத்தது ஆசிரியரது தெய்வக்கவி நலம்; இத்துணையும் சேரனார் கொடுங்கோளூரிலிருந்தவாறே அறிந்தது உயிரெல்லாம் சாற்று மாற்றங்களுணரும் அவரது சத்தியினாலும், அவருக்கு உணர்த்துமாறு எண்ணிய நம்பிகளது நினைப்பின் உறைப்பினாலுமாம்; "உயிர் எல்லாம் சாற்று மாற்றங்க ளுணர்பெருந் துணைவர்" (4262) என்றவாற்றாற் குறிப்பித்த நயமும் காண்க.
நீண்ட தூரத்து அப்பாற் கிளம்பும் மொழிகள், ஓசைகள் முதலியவை ஒலியலைகளாகப் பூத ஆகாயம் பற்றுக்கோடாக இப்பால் வந்து அவற்றை வாங்கும் கருவியமைப்பின் ஒழுங்கு மூலமாக நமக்குச் செவிப் புலப்படுதல், இந்நாளில், வானொலி தத்துவ ஆராய்ச்சியின் பயனாய் நாம் கண்ட உண்மை; Rodio Transmitting and Recieving Stations; Recieving set; என்பனவாதி விஞ்ஞான முறையமைப்புக்கள் ஆங்கிலத்திற் பேசப்படுவன. இதுபோல, இதனினும் மேலாய், நுண்ணிய அறிவாகாயம் பற்றுக் கோடாகக்கொண்டு ஒருவர் எண்ணிய நினைவுகள் ஒத்த உறைப்புடைய ஒருவரது உள்ளத்தினுள் அறிவலைகளாகச் சென்று தாக்கி, அந்நினைவுகளை அவர் அறிவுக்குப் புலப்படுத்துவன என்பது மனத் தத்துவ நூலோர் கண்ட மறுக்கலாகாத அனுபவவுண்மை; இவையெல்லாம் ஈண்டுப் "பெருந்துணை வரை மனத்தினிற் கொண்டு சார்ந்தார்" (4262) என்றும், "தோழர் தஞ்செய லறிந்து" (4263) என்றும் கூறியவாற்றால் உய்த்துணர வைத்தது ஆசிரியரது தெய்வக்கவி நலம்.
இவ்வாறு நிகழ்வதற்கு இருவருக்குமிடையே செறிவுடைய மனவுறைப்பாகிய துணைத் தொடர்பு இருத்தல் வேண்டுமென்பதும் குறிப்பித்தவாறு காண்க. காணாமலே நட்புப் பூண்ட புலவர் பிசிராந்தையார் - கோப்பெருஞ் சோழர் இவர்களைப் பற்றிப் புறநானூற்றில் வரும் வரலாறுகளும் இங்குக் கருதற்பாலன; ஆயின், இங்கு, அதற்கு மேலாய் விளைந்த இவர்களது தோழமை, இறைவர்பால் கொண்ட அன்பு தரவந்த அழியாத பதித் தன்மைவாய்ந்த தூய உயிர்த்தொடர்பு; மற்றது அவ்வாறன்றிப் பசுத்தன்மை பற்றிய அழியும் தன்மையவாகிய பாசத்தொடர்பு; காணாமலே அன்புத் தொழும்பு பூண்ட அப்பூதியாரது எண்ணம், அரசுகளைத் தம்மையறியாமலே அப்பூதியாரது கடைத் தலையிற் செலுத்திய மனவுணர்வின் வலிமையும் ஈண்டுக் கருதற்பாலது.
சார நின்றது ஓர் பரியினை - சார - அடுத்து; சிவமந்திரச் சார்பும், அது வாறாகத் திருக்கயிலைச் சார்பும் பெற நின்றதாகிய ஒரு ஒப்பற்ற பரி என்ற குறிப்பும் காண்க.
சார்வார்.....கண்டார் - முன்னர்க் கூறியபடி ஞானாகாய வழியினாலே அறிவினுள் வெளிப்படக் கண்டார்; அது மனத்துள் அறிந்தநிலை; "அறிந்து" என்றது அக்குறிப்புடையது; கண்டார் - என்றது குதிரை யேறிக் கொடுங்கோளூரில் தமது திருமாளிகையினின்றும் திருவஞ்சைக்களம் சாரப் புறப்பட்ட எல்லையில் கண்ணாற் கண்ட வாயிற்காட்சி; முன்னர் அறிவினுள் அறிந்தது யோகக் காட்சி என்பர்.
விண்மேற் செலும் மெய்த் தொண்டர் - நம்பிகள்; சேரனார் கண்டபோது நம்பிகள் ஆகாய வீதியில் யானையின் மேற் செல்கின்றார் என்பது. யானையேறி நிலத்திற் சென்று, பின்னர்க் கடல்வழிச் சென்று கடலரையன் அலர் கொண்டு முன் வந்திறைஞ்சி வழி தந்த பின் ஆகாயத்திற் சென்ற நிலைகள் முன்னர் நிகழ்ந்தன என்பதுமாம். பதிகம் பார்க்க. தொண்டர் - பெருந் தொண்டராகு நிலையிலே இறைவர் அறிவிக்க அறிந்து, அந்நிலையிலேயே நின்று நம்பிகள்பாற் சேரனார் அன்பு பூண்டொழுகியமையால் ஈண்டு இவ்வாற்றாற் கூறினார்.
பாரில் நின்றிலர்.....விட்டார் - அவர் விண் மேற் செலக் கண்டனராதலின் அவரைப் பிரிந்து ஒரு சிறிதும் நிலத்தில் நிற்க இசையாது மனத்தை அவர்பாற் செலுத்தினார்; அதன் வேகத்தோடு ஒப்பப் (மனோ வேகத்தில்) பரியினையும் செலுத்தினார் என்பது; நின்றிலர் - நின்றிலராகி; பாரில் நின்றிலர் - நிற்கலாற்றாராய்; முற்றெச்சம். சென்ற - இறந்த காலம், மனம் முன் சென்றுவிட்டது என்றுணர்த்திற்று; சென்ற - தம் மனத்தொடு - என்றதும் விரைவுக் குறிப்பு.
முன் செலவிடுதலாவது - மனத்தின் முன்னே என்றும், யானையின் முன் செல்ல என்றும் கொள்ள நின்றது; "முன் வலங்கொண்டு" (4264) என மேற் கூறுதல் காண்க.
திருவஞ்சைக் களஞ்சார - என்பதும் பாடம்.