பாடல் எண் :4264

விட்ட வெம்பரிச் செவியினிற் புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திர மோதலி னிருவிசும் பெழப்பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன் றொண்டர்மேல் கொண்டமாதங் கத்தை
முட்ட வெய்திமுன் வலங்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக.
36
(இ-ள்)விட்ட.....ஓதலின் - முன் கூறியபடி கடவி விட்ட விருப்பமுடைய குதிரையின் செவியிலே நில அரசர்களுள் முதன்மை பெற்ற வேந்தராகிய சேரமானார் விதிப்படி இட்டமாம் சிவமந்திரத்தினை ஓதினாராதலின்; இருவிசும்பு எழப் பாய்ந்து - பெரிய ஆகாயத்திலே எழும்பப் பாய்ந்து மேற்சென்று; மட்டலர்ந்த....எய்தி - மணம் பொருந்த அலர்ந்த மலர்களையுடைய பசிய மாலையணிந்த வன்றொண்டர் மேல் கொண்ட வெள்ளானையினை அணுகச் சேர்ந்து; முன் வலங்கொண்டு.....முன்னாக - முதலில் வலமாக வந்து அதன் முன்னாகச் சென்றது.
(வி-ரை) விட்ட - முன் பாட்டில் "சென்றதம் மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்" (4263) என்று கூறியவாறு மனவேகத்தில் விட்ட.
வெம்பரி - தாம் விரும்பி யூர்ந்த குதிரை; வெம்மை- விருப்பம்.
புவிமுதல் வேந்தர் - தமிழ் மூவேந்தர்களுள் முதலில் வைத்தெண்ணப்பட்டவர்; முதன்மை என்றலுமாம்; இவ்வொருமரபே இன்றும் ஒருவாறு அரசு தாங்கி நிலவி வருதல் காண்க.
விதியாலே - சிவாகம விதிப்படி; விதித்தல் - ஆக்ஞை செய்தலுமாம். விதி - நியதி என்று கொண்டு அக்குதிரையின் மேல் விண்ணிற் சென்று கயிலை சாரும் விதியுண்மையாலே என்றலுமாம்.
இட்டமாம் - தமக்கு இட்டமாகிய; மிகக் கைவசமாய்த் தாம் விரும்பிக் கணித்து வரும்; இட்டம் ஆம் - விருப்பத்தை முற்றிவைக்கும் என்றலுமாம். இப்பொருளில் ஆம் - ஆக்குவிக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது.
சிவமந்திரம் - இதுபற்றிச் சிவாகமம் வல்ல அனுபவமுடைய தேசிகர்பால் அறிந்துகொள்க.1 ஓதலின் - ஓதலினால்; தரையில் ஓடும் குதிரை ஆகாயத்தில் எழுந்து பாய்ந்து ஓடுதல் யாங்ஙனம் என்றையுற்று அவநம்பிக்கைப்படும் மாக்களுக் கறிவுறுத்தக் காரணங் கூறியருளினார்; சடப்பொருள்களாகிய பொறிகளும் ஓர் சடசத்தியதாகிய விசையினால் நிலத்தினின்று ஆகாயத்தில் எழுந்து இந்நாளிற் பறக்கக் காண்போமாகில், உயிரும் அறிவும் உள்ள பொருளாகிய குதிரை ஓர் சித் சத்தியாகிய மந்திரவலிமையால் ஆகாயத்தில் பறத்தல் எளிதேயாம் என்று விடுக்க; சட சத்தியில் நம்பிக்கைகொண்டு மந்திர சிற்சத்தியில் நம்பிக்கை யில்லையேல் அது வேறுவகையால் விடுக்கற் பாலதாம்; ஈண்டு விடுத்தல் மற்றொன்று விரித்தலாய்ப் பெருகுமென்று விடுக்க; இன்னோர்க்கு இறைவர் அருள்வாராக என்று வேண்டுவோம்.
விசும்பு எழு - விசும்பிண்கண் எழ என்று ஏழனுருபு விரிக்க.
பைந்தெரியல் - பசிய மாலை; பசுமை - ஈண்டுப் புதுமையும் அழகும் குறித்தது.
மாதங்கம் - யானை; ஈண்டு வெள்ளானையினைக் குறித்தது; முட்ட - அணுக.
முன்வலங்கொண்டு - முதலில் வலமாகச் சூழ்ந்து; அதன் முன்னாகச் சென்றது - என்க; வினைமுற்று முன்வந்தது விரைவுப்பொருட்டு; மற்று - அசை.