உதியர் மன்னவர் தம்பெருஞ் சேனையி னுடன்சென்ற படைவீரர் கதிகொள் வாசியிற் செல்பவர் தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை எதிர்வி சும்பினிற் கண்டுபின் கண்டில ராதலி னெல்லாரும் முதிரு மன்பினி லுருவிய சுரிகையான் முறைமுறை யுடல்வீழ்த்தார். | 37 | (இ-ள்) உதியர்....வீரர் - சேரமான் பெருமாணாயனாரது பெருஞ் சேனையினுடனே சென்ற படையின் வீரர்கள்; கதிகொள்...ஆதலின் மிக்க வேகத்தில் விண்ணின் மேற் செல்கின்ற தமது மன்னரைத் தமது கண்ணிற்கு புலப்படும் எல்லை அளவும் ஆகாயத்திற் கண்டு அதன்மேல் கண்டிலராயினர்; ஆதலின்; எல்லாரும்....._____________________ 1 இது பரியை விரைந்த செலவினதாக்கு விக்கும் பஞ்சாக்கரம். அஷ்ட கர்ம பஞ்சாக்கர மாறுதல் பேதங்களுள் ஒன்றாகிய உச்சாடன கர்மாவின் பிரிவைச் சேர்ந்த மிருக உச்சாடன பஞ்சாக்கரத்துட்பட்ட அசுவமனோகதி பஞ்சாக்கர மென்பது ந.சிவப்பிரகாச குருக்களையா அவர்கள் குறிப்பு. வீழ்த்தார் - எல்லாரும் அவர்பால் வைத்த முதிர்ச்சியுடைய அன்பினாலே உருவிய தமது உடைவாளினாலே முறைமுறையாகத் தமது உடலினை வீழ்த்தினர். (வி-ரை) இதனால் சேரனாரது படைவீரர் தமது அரசர்பாற் கொண்ட அன்பின் முதிர்ச்சியின் செயலும் வீரமும் கூறப்பட்டன. "ஈறில்லாத், தாவில் விறலும்.....படைவாகன முதலாங், காவன் மன்னர்க் குரியனவும்" (3761) இறைவரருளாற் றரப்பெற்ற சேரனாரது படையின் வீரர்களாதலாலும், இதுவரை குறையாத விறலும் வெற்றியுமே பெற்று விளங்கிய வீரர்களாதலாலும், அவர்பால் வைத்த அன்பின் முதிர்ச்சியாலே அவரைப் பிரிந்திருக்கலாற்றாது இவ்வாற தம் சுரிகையாலே தமது உடலினை வீழ்த்தினர் என்க. வீழ்த்திய செய்கையால் வீர யாக்கையுடன் அவரைப் பிரியா நிலையும் சேவகமும் பெற்றனர் என்பதும், அதன் பொருட்டே அவ்வாறு செய்தனர் என்பதும் மேல்வரும் பாட்டிற் காண்க. சேரலனாரது பெருமையும் உடன் கூறப்பட்ட குறிப்பும் கண்டுகொள்க. உதியர் - போரிற் சிறந்தவராதல்பற்றி வந்த பெயர்; யுத் - யுத்தம் - போர். உடன் சென்ற படைவீரர் - சேரலனார் பரிமேற் கொண்டு திருவஞ்சைக் களத்தினின்றும் தனி போதக் கண்டு அவருடன் சென்ற வீரர்கள். கதிகொள் - நிலமிசை யன்றி விண்ணிற் கதியுடன் சென்ற. கதி - விண்ணிற் சென்று சிவகதி கொள்ளநின்ற என்ற குறிப்புமாம். வாசியிற் செல்பவர் - திருவருளாலே சிவத்தையடையச் செல்பவர் என்பதும் குறிப்பு; வா - அருள்; சி - சிவம். தம் கட்புலப்படும் எல்லை கண்டு பின் கண்டிலர் - கண்ணிந்திரியம் சேய்த்தாகச் சென்று ஒளியலைகள் மூலம் சேய்மைப் பொருள்களையும் அறியவல்லது. ஆயின் அதற்கோர் எல்லையுண்டாதலின் அதனளவும் கண்டுகொண்டு நின்றனர். அதன் பின் காண இயலாமையின் உடலினை வீழ்த்தி, நுண்ணுடம்பு பெற்று, அவர் முன் சென்று சேவக மேற்றனர்; கண்ணின் நின்று மறைந்த பின்னரே இக் கருத்துத் தோன்றி இச்செயல் செய்தனர் என்க; ஆதலின் - என்ற குறிப்புமிது. முதிரும் அன்பினில் - அன்பினால் என்க; அவர்பால் கொண்ட அன்பின் முதிர்ச்சியினாலே; கணவன் மனைவி யிருவருள் ஒருவர் இறந்தபோது பிரிவாற்றாது மற்றவர் தாமே உயிர்துறத்தல் இன்றும் உலகியலில் காண்கின்றோம்; ஆயின் இங்கு இவர்கள் உடல் வீழ்த்தக் காரணமாய் நின்றது வீரர்கள் தலைவர்பால் கொண்ட சிவ வீரஅன்பு. சுரிகை - உடைவாள்; க்ஷுரிகா என்னும் வடமொழியின் திரிபு; சூரி என்ற வழக்கும் காண்க. உடல்வீழ்த்தார் - மங்கல வழக்கு; உடலானது உயிர் செலுத்திய வழிச் செல்லும் பண்டம் என்ற உண்மையினை அனுபவத்திற் கொண்டனர். உடல் - தூலமாகிய பூதஉடல். |
|
|