வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய் வில்லவர் பெருமானைச் சார முன்சென்று சேவக மேற்றனர்; தனித்தொண்டர் மேல்கொண்ட வாரு மும்மதத் தருவிவெள் ளானைக்கு வயப்பரி முன்வைத்துச் சேரர் வீரருஞ் சென்றனர் மன்றவர் திருமலைத் திசைநோக்கி. | 38 | (இ-ள்) வீர....ஏற்றனர் - அவ்வீரர்கள் நுண்ணிதாகிய வீர உடலினை மேல் கொண்டு சென்று போய்ச் சேரர் பெருமானாரைச் சார முன்னே சென்று, அவரது சேவகத்தினை (பணியினை) ஏற்றனர்; தனித்தொண்டர்....முன் வைத்து - ஒப்பற்ற பெருந்தொண்டராகிய நம்பிகள் மேல் கொண்ட மும்மதம் அருவியாகப் பாய்கின்ற வெள்ளானைக்குக் கொற்றக் குதிரை முன்னே செல்ல அமைய; சேரர் வீரரும்....நோக்கி - சேரர்களின் வீரத்தலைவராகிய சேரனாரும் அம்பலவாணரது கயிலைத் திருமலையின் திசையினை நோக்கிச் சென்றனர். (வி-ரை) வீரயாக்கை - போரிலும்; பிறாண்டும் உடல்விடும் வீரர்கள் மேற்கொள்ளும் நுண்ணிய உடல் (சூக்கும வுடம்பு) வீரயாக்கை எனவும், அவர்கள் அடைவது வீர சுவர்க்கம் எனவும் படும். சென்று போய் - சென்று - என்பது இவ்வுலக நில எல்லை யளவும், போய் என்பது விண்ணுலகிலும் சென்ற நிலைகள் குறித்தன. வில்லவர் பெருமான் - வில்லவர் - சேரர்; மரபுப் பெயர். "தென்னவன் செம்பியன் வில்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள்" (பிள் - தேவா) விற்கொடியுடைய காரணம் பற்றிப் போந்த பெயர் என்பர். சேரமானாரது திருவுருவம் கையில் வில் ஏந்திய கோலத்துடன் திருவஞ்சைக்களத்தில் உள்ளது. வீரர்கள் சென்றடைந்த தலைமை குறிக்க இப்பெயராற் கூறினார்; மேல் "சேரர் வீரர்" என்பதும் காண்க. சேவகம் - பணி; சேவை தனித்தொண்டர் - நம்பிகள். முன் வைத்து - முன்னே சென்றவாறே. வெள்ளானைக்கு முன் வைத்துச் சென்றனர் - ஆகாய வீதியில் திருமலைத் திசை நோக்கி வெள்ளானையும் அதன் முன்பு வயப்பரியுமாக இவ்வாறு சென்றன என்பது. சென்றனர் - திருமலைத் திசைநோக்கி - ஆகாய வீதியாகலின் திசையறி கருவியாக ஒரு குறிக்கோள் வேண்டுமாதலின் அது திருமலை நோக்கியவாறே பொருந்த என்பதாம். திருமலை - கயிலை. "திருமலை, அதிர வார்த்தெடுத் தான்" (அரசு - தேவா). |
|
|