யானைமேல்கொண்டு செல்கின்றபொழுதினிலிமையவர்குழாமென்னுந் தானை முன்செலத் "தானெனை முன்படைத் தா"னெனுந் தமிழ்மாலை மான வன்றொண்டர் பாடிமுன் னணைந்தனர் மதிநதி பொதிவேணித் தேன லம்புதண் கொன்றையார் திருமலைத் தென்றிசைத் திருவாயில். | 39 | (இ-ள்) யானை....பொழுதினில் - வெள்ளை யானையின்மேல் ஏறிக்கொண்டு செல்கின்றபோது; இமையவர்....முன் செல - தேவர்களின் கூட்டம் என்னும் சேனை முன்னே செல்ல; தானெனை...பாடி - "தானெனை முன் படைத்தான்" என்று தொடங்கும் தமிழ்மாலையினைப் பெருமையுடைய வன்றொண்டர் பாடி; மதிநதி....திருவாயில் - தேன் பிலிற்றுகின்ற குளிர்ந்த கொன்றை மலர் சூடிய இறைவரது திருமலையின் தென்றிசைத் திருவாயிலின்; முன் அணைந்தனர் - முன்னே சேர்ந்தனர். (வி-ரை) யானை - "சென்று, ஆரூரனை இந்த யானையின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று அயன் முதற்றேவர்களுக்குச் சிவபெருமான் கட்டளையிட்டனுப்பிய வெள்ளை யானை. 4254. "தானெனை முன் படைத்தான்" எனும் - இது நம்பியாரூரர் கயிலை மலையினை நோக்கி வரும்போது வழியிற் பாடியருளிய பதிகத்தின் தொடக்கமாகிய முதற்குறிப்பு. தானை - இங்குக் கூட்டம் என்ற பொருளில் வந்தது. சேரர்க்கு ஒப்ப நம்பிகளுக்கும் சேனை முன் சென்றது என்றதும் குறிப்பு. மானம் - பெருமை; முன் அணைந்தனர் - முன் - உடன்வந்த சேரமான் பெருமாளுக்கு முன்பு. திருமலை - கயிலைமலை. அடைமொழியின்றியே சிறப்புப் பற்றி அறியப்படுவது. தென்றிசைத் திருவாயில் - தென்றிசையினின்றும் வடக்கிலுள்ள கயிலையினை நோக்கி நம்பிகள் வருகின்றாராதலின் தெற்குத் திருவாயிலின் வந்தணைந்தனர் என்க. கொன்றையார் - திருவஞ்சைக் களத்தினின்றும் நம்பிகள் எழுந்தருளி வருகின்றாராதலின் அப்பதியின் சிறந்த தலமரமாகிய கொன்றையினைப் பற்றிக் கூறிய குறிப்பும் காண்க. |
|
|