மாசில்வெண்மைசேர்பரொளியுலகெலா மலர்ந்திடவளர்மெய்ம்மை ஆசி லன்பர்தஞ் சிந்தைபோல் விளங்கிய மணிகிள ரணிவாயில் தேசு தங்கிய யானையும் புரவியு மிழிந்துசே ணிடைச்செல்வார் ஈசர் வெள்ளிமா மலைத்தடம் பலகடந் தெய்தினர் மணிவாயில். | 40 | (இ-ள்) மாசில்.....மலர்ந்திட - குற்றமற்ற வெண்மையோடு பொருந்திய திருநீறு போன்ற பெரிய ஒளியானது உலகெல்லாம் விரிய; வளர்.....மணிவாயில் - வளரும் மெய்ம்மையாகிய குற்றமில்லாத அன்பர்களுடைய சிந்தைபோல விளங்கிய அழகு மிகுந்த மலையின் அணிவாயிலின்கண்; தேசு.....செல்வார் - ஒளியினையுடைய யானையினின்றும் குதிரையினின்றும் முறையே இருவரும் இறங்கி நெடுந்தூரம் செல்வார்களாகி; ஈசர்.....மணிவாயில் - இறைவருடைய பெரிய வெள்ளிமலையின் இடங்கள் பலவற்றையும் கடந்து அழகிய மணிவாயிலில் வந்து சேர்ந்தனர். (வி-ரை) மாசில் வெண்மைசேர் பேரொளி - இது இமயமால் வரையின் சாரலில் உள்ளமையானும், கயிலைமலை பனியினால் மூடப்பட்டமையானும் ஆவது. "பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தென" (11) என்றது காண்க. மாசில் வெண்மை என்றது அக்குறிப்புத் தருவது.மாசில் - குற்றத்தை நீக்கும் என்ற குறிப்புமுடையது; ஆசில் - குற்றமற்ற. "உலகெலாம்" - இப்புராணத்திற்கு இறைவர் கொடுத்தருளிய முதன் மொழி; கயிலையினின்றும் போந்த நம்பிகள் மீளத்திருக்கயிலைக்கு வரும் அரிய பெரிய நிலை குறிக்கும் இடமாதலின் இங்கு அதனை வைத்தருளினர் என்க. வளர்.....வாயில் - அன்பர்களது சிந்தைபோல மலையின் வாயில் விளங்கிற்று. மெய்பற்றி வந்த உவமம். என்னை? இறைவர் வீற்றிருப்பதனாலும், பெருமையினாலும், மெய்யொளித் தூய்மையினும் அன்பர் சிந்தை போன்றது என்க. 22வது பாட்டுப் பார்க்க; ஆசிலன்பர் - நம்பிகளும் சேரமானாரும் ஆகிய குறிப்பும், அநபாயர் என்ற குறிப்பும் காண்க. "ஓங்கு நிலைத்தன்மை"யாலும், "தீங்கு நெறியடையாத தடை"யாதலாலும், வாயில், அன்பர் சிந்தைபோல் விளங்கிற்று என்றலுமாம். (1165) முன் உரைத்தவை பார்க்க. அணிவாயில் - இது மலையினை அணுக உள்ள தாழ்வரையின் வாயில்; மேல் மணிவாயில் என்பது மலையின் மேல் உள்ள திருக்கோயிலின் வாயில். யானையும் புரவியும் இழிந்து - யானையினின்றும் குதிரையினின்றும் முறையே நம்பிகளும் சேரர் பெருமானும் இழிந்து : நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபுகள் தொக்கன. சேணிடை - மலைத்தாழ்வரை வாயிலினின்றும் நெடுந்தூரம் ஏறிச் சென்ற பின்னரே கோயிலின் திருவாயில் அடையத்தக்கது. தடம் - இடங்கள்; தடை - என்பது பாடமாயின் வழியிடைப் பலவாயில்கள் என்க. |
|
|