பாடல் எண் :4269

அங்க ணெய்திய திருவணுக் கன்றிரு வாயிலி னடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர்; தம்பிரா னருளாலே,
பொங்குமாமதம் பொழிந்தவெள்ளானையினும்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினா ரண்ணலார் திருமுன்பு.
41
(இ-ள்) அங்கண்.....நின்றனர் - அவ்விடத்துச் சார்வாகிய திருவணுக்கன்றிரு வாயிலில் விறலுள்ள சேரமான் பெருமானார் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டு நின்றனர்; பொங்குமாமதம் பொழிந்த வெள்ளானையின் - பொங்கும் கரிய மதநீர் பொழிந்த வெள்ளானையின் மேலே; தம்பிரானருளாலே - இறைவரது திருவருளினாலே; உம்பர்.....காவலர் - தேவர்கள் சூழ்ந்து போற்றிட வந்த நந்தம் பெருமானாராகிய திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள்; அண்ணலார் திருமுன்பு நண்ணினார் - இறைவரது திருமுன்பு சார்ந்தனர்.
(வி-ரை) திருவணுக்கன் றிருவாயிலின்கண் சேரர் காவலர் தடையுண்டு நின்றனர்; நாவலூர்க்காவலர் திருமுன்பு நண்ணினார்; இவ்விரண்டினுக்கும் காரணம் அண்ணலார் திருவருளே யாம் என்பார் அதனை இரண்டிற்கும் இடையில் வைத்தனர்.
சேரர் காவலர் - நாவலூர்க் காவலர் - என்று இருவர்க்கும் ஒப்புக் கூறிய நயமும் கண்டு கொள்க. அன்பினால் இருவரும் ஒப்பர்; அழையாமை வந்ததும், ஒருவர் விண்ணப்பித்து அழைக்கப்பட்டு வந்ததும் இவர் தம்முள் வேறுபாடாம். (4273) பார்க்க. தடையுண்டு - கோயினாயகராகிய நந்திபெருமானாரால் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டு.
நாவலர் காவலர் நண்ணினார் திருமுன்பு - என்பதும் பாடம்.