"அடியனேன் பிழைபொறுத்தெனையாண்டுகொண்டத்தொடக் கினைநீக்கி முடிவிலாநெறிதரும்பெருங் கருணையென் றரத்ததோ?" வெனமுன்னர்ப் படியு நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும் பரம்பரை யானந்த வடிவு நின்றது போன்றின்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்றொண்டர். | 43 | (இ-ள்) அடியனேன்....என - அடியேன் செய்த பிழையினைப் பொறுத்து என்னை ஆளாகக்கொண்டு, பிழையினாற் போந்த அந்தத் தொடக்கினை நீக்கி, முடிவில்லாத மீளா நெறியாகிய திருவடிப் பேற்றினைத் தருகின்ற தேவரீரது பெரிய கருணையானது சிறிய எனது தரத்துக்குத் தகுதியாமோ? என்று துதித்து; முன்னர் - திருமுன்பு; படியும்.....எழும் - படிகின்ற உள்ளத்தோடு பலமுறையும் பணிந்து எழுகின்ற; பரம்பரை - அடுத்து அடுத்துத் தொடர்ச்சியோடு வரும்; ஆனந்த....வன்றொண்டர் - ஆனந்தமே ஒரு வடிவெடுத்து நின்றது போன்று இன்ப வெள்ளத்தில் அழுந்தி வன்றொண்டப் பெருமான் திளைத்தனர். (வி-ரை) அடியனேன் - என்தரத்ததோ? - அடியேன் செய்த பிழை பெரிது; அப்பெரிய பிழையினையும் பொறுத்து ஆட்கொண்ட தேவரீரது கருணை மிகப் பெரிது; அத்துணைக் கருணை பெறுதற்கு அடியேன் எத்துணையும் தகுதியில்லேன் என்பதாம்; இவ்வாறு தமது சிறுமையினையும் தகுதியின்மையினையும், இறைவரது கருணையின் பெருமையினையும் எண்ணி எண்ணிப் பாராட்டுதல் பெரியோரியல்பு; "பித்தனேன் பேதையேன் பேயே னாயேன்....பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே, யித்தனையு மெம்பரமோ, வைய! வையோ! வெம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே!" (அரசுகள் - தாண்);பிழை என்று நம்பிகள் கூறியவை கயிலையின் முன் நிகழ்ச்சியும், ‘அடியேனலேன்' என்ற வழக்கும், பிறவுமாம்; தொடக்கு - பந்தம். பன்முறை பணிந்தெழும் பரம்பரை - வணங்கி எழுதற்கு விதித்த முறைகளின் மிக்கு ஆராமையால் பன்முறை பணிந்தெழுந்தார்; பரம்பரையால் - என மூன்றனுருபு விரிக்க; பரம்பரையாவது ஒன்றன்பின் அதுபற்றிய ஒன்றாகத் தொடர்ச்சியாய் வருவது. இடையறாதொழுகும் நீரோட்டம் போல என் றுவமை கூறுவர். ஆனந்த வடிவு நின்றது போன்று - ஆனந்தமென்பதே ஓர் வடிவெடுத்து நின்றது போல; ஆனந்தம், அனுபவிப்போனும் அனுபவிக்கப் படுவோனும் ஆனந்தமும் என்ற உணர்வு இன்றி அதுவே மயமாக நிற்பது என்பதாம். மலர்தல் - சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தல். |
|
|