அரச ரஞ்சலி கூப்பிநின் "றடியனே னாரூரர் கழல்போற்றிப் புரசை யானைமுன் சேவித்து வந்தனன்; பொழியுநின் கருணைத்தெண் டிரைசெய்வெள்ளமுன்கொடுவந்து புகுத்தலிற்றிருமுன்பு வரப்பெற்றேன்; விரைசெய் கொன்றைசேர் வேணியா! யினியொரு விண்ணப்பமுள தென்று, | 46 | (இ-ள்) அரசர் அஞ்சலி கூப்பிநின்று - சேரனார் சிரமேற் கைகூப்பி நின்று; அடியனேன்.....வந்தனன் - அடியேன் நம்பியாரூரருடைய திருவடிகளைப் போற்றிக்கொண்டு அவர் அருளினால் ஏறிவந்த புரசையானையின் முன்னே அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன்; பொழியுநின்....வரப்பெற்றேன் - தேவரீரது மிக்குப் பொழிகின்ற கருணையாகிய தெள்ளிய அலையினையுடைய பெருவெள்ளமானது அடியேனை உந்திக்கொண்டுவந்து இங்கே புகுத்தியதனாலே தேவரீரது திருமுன்பு வந்து சேரும் பேறு பெற்றேன்; விரைசெய்....என்று - மணமுடைய கொன்றைமலர் மாலையினை யணிந்த சடையினையுடைய பெருமானே! மேலும் ஒரு விண்ணப்பம் உளது" என்று கூறி, (வி-ரை) அடியனேன்...வரப்பெற்றேன் - புன்முறுவல்பூத்து இங்கு நாம் அழையாமை நீ வந்ததென்? என்று வினவியருளியதற்குச் சேரனார் கூறிய விடை; முதலாவது, அடியேன் இங்கு வரக்கருதி வரவில்லை; நம்பியாரூரைப் பிறிவின்றிச் சேவித்துவருதலையே கருத்தாகக்கொண்டு யானையின்முன் அவரைச் சேவித்துக்கொண்டே வந்தனன்; அச்சேவை அடியேனைத் தேவரீரது திருவணுக்கன் றிருவாயில்வரை கொண்டுவந்து விட்டது; இரண்டாவது, இனி, அதன்மேல் இங்குத் திருமுன்பு வந்த செயலும் அடியேனது செயலாவதன்று; தேவரீரது அருளிப்பாடு என்னும் கருணைப் பெருவெள்ளம் என்னை உந்திக்கொண்டு வந்து திருமுன்பு புகுத்தியது. இது வழியும் அடியேன் இங்கு வரவேண்டும் என்ற முனைப்பின்றித் திருவருட் செயலாகவே வரப்பெற்றேன் என்றதாம்; இஃது அரசனாரது சொற்பெரு வன்மையும், தற்போதமிழந்த பேரடிமைத் திறமும் ஆம்; இவை கண்டு பின்பற்றி உலகம் உய்யத்தக்கது. புரசை - யானைக் கழுத்திடு கயிறு. "உடையா னடியா ரடியா ருடன் போய்ப், படையா ரழன்மேனி பதிசென்று புக்கேன், கடையார நின்றவர் கண்டறிவிப்ப, வுடையான் வருகென வோலவென் றானே" திருமந் II. 211. தெள் - திரை - செய் - வெள்ளம் - கொடுவந்து புகுத்தலின் - அலையினாலும், பெருவெள்ளமாம் தன்மையாலும், அதனகப்பட்டுப் புகுத்தப்பெற்றேன் என்றது அவரது திருவருளின்றி நிகழ்ச்சி யொன்றுமில்லை என்றபடி. இறைவர் அருளின்படி நந்தியெம்பெருமான் "வானவர்க்கு அருளிப்பாடு" என்று அழைத்தருளிய செயலைக் குறித்தது. கொன்றைசேர் வேணியாய் - சிவனுக்குரிய சிறப்பாகிய கொன்றைத் திருவடையாள மாலை. நியதியாய்த் தாம் வழிபட்ட திருவஞ்சைக்களத்தினின்றும் வழிபட்டுப் போந்தமையால் அது அப்பதியின் தல மரமாதலும் குறிப்பு. புகுதலின் - என்பதும் பாடம். |
|
|