பாடல் எண் :4275

"பெருகு வேதமு முனிவருந் துதிப்பரும் பெருமையா! யுனையன்பாற்
றிருவு லாப்புறம் பாடினேன்; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவுபாசத்தையகன்றிடவன்றொண்டர்கூட்டம்வைத் தா"யென்ன,
அருளு மீசருஞ்"சொல்லுக" வென்றன; ரன்பருங் கேட்பித்தார்.
47
(இ-ள்) பெருகும்....பெருமையாய்! - பெருகுகின்ற வேதங்களும் முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையுடையவரே!; உனை.....வைத்தாய் என்ன - அன்பினாலே தேவரீரைத் திருவுலாப்புறப் பாட்டுப் பாடினேன்; அதனை அருள் செய்து திருச்செவி சாத்திக் கேட்டருள வேண்டும்; பொருந்திய பாசத்தினின்று நீங்கிட வன்றொண்டரது கூட்டத்தினைச் சாரவைத்தவரே! என்று விண்ணப்பிக்க; அருளும்....என்றனர் - அருளே புரிகின்ற பெருமானும் சொல்லுக என்றருளினர்; அன்பரும் கேட்பித்தார் - அன்பராகிய சேரனாரும் பாடி அவரைக் கேட்பித்தனர்.
(வி-ரை) பெருகும்.....துதிப்பரும் பெருமையாய் - தேவரீரது பெருமை துதித்தற்கும் அரியது. உமது வாய்மொழியாகிய பெரிய வேதங்களாலும், உம்மையே உணர்ந்து உள்ளந் தழுவிய பெரு முனிவர்களாலும் துதித்தற்கரியது; ஆயின் வேறுயாவர் துதிக்க வல்லார்?
அன்பால் உனைத் திருவுலாப்புறம் பாடினேன் - அவ்வாறாதல் அறிந்துவைத்தும், திருவுலாப்புறம் பாடி உன்னைத் துதித்தேன். என்னை? எனின், அஃது அன்பின் றிறத்தலாகியதன்றி நான் துதிப்பேன் என்ற எண்ணத்தலாகியதன்று என்பது. திருவுலாப்புறம் - புறப்பாட்டின் வகையுள் ஒன்றாகிய திருவுலா என்னும் நூல். புறத்திணைகள் பன்னிரண்டனுள், புறப்புறம் என்னும் பாடாண் திணையுள் வருவது. அதன் துறைகள் 47-ல் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்ற துறையுள் முற்பகுக்கப்பட்டது. இதுவே முதலிற் பாடப்பட்டதாதலின் ஆதியுலா என்றும், சிவஞானமே கருத்தாகப் பதிபோதத்தால் கயிலை நாயகர்மேல் அருளப்பட்டதாதலின் திருக்கயிலாய ஞானவுலா என்றும், தெய்வத்தன்மை வாய்ந்ததாதலின் தெய்வவுலா என்றும் பலவாறும் விதந்து போற்றப்படுவது.
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும் - கேட்டருளுதல் வேண்டும். கேட்டலாவது அருள்புரிதல்.
மருவு.....வைத்தாய் - மருவுபாசம் - ஆன்மாவுடன் சகசமாயுள்ள ஆணவமலமும் வாசனாமலமும்; வன்றொண்டர் கூட்டம் வைத்தாய் - முன்னர் அவரை நினைப்பித்துச் சாரச்செய்த திருவருட்செயல் (3791); மருவுபாசத்தை அகன்றிட என்றது தேவரீரது வழிபாட்டினால் ஆணவமல நீக்கமும் சிவப்பேறும் பெற்ற நிலையும், அடியார் கூட்டச் சார்வினால் வாசனாமல நீக்கமும் பெற்ற நிலையும், என்ற ஞானசாத்திரம் 12-ம் சூத்திரத்தின் உண்மை விளக்கங் கூறியபடி; மருவுதல் - தங்கி நிற்றல்.
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் - அருளும் ஈசர் - தமது செயல் யாவும் அருளேயாக இயற்றும் இறைவர்; ஐந்தொழில்களும் அருட்செயலேயாவன என்பது ஞானநூற் கருத்து. முன்னர் இவரது உள்ளத்துள் நின்று பாடுவித்து அருளிய ஈசர் என்பதும் குறிப்பு. இனி, அதனைக் கேட்டு அருள்புரிய நின்ற இறைவர் என்பதும் குறிப்பு. அவ்வருள் மேற்பாட்டிற் கூறப்படும்.
அன்பரும் கேட்பித்தார் - அன்பர் - சேரமானார். அன்பினாற் பாடினேன் என்ற குறிப்பு. கேட்பித்தார். "கேளாதே எல்லாம் கேட்டார்" என்றபடி பிறர் கேட்பிக்காமலே இருந்தவாறே எல்லாவற்றையும் கேட்கவல்ல இறைவரைத், தாம் சொல்வது போலவும், அவரைக் கேட்கச்செய்வது போலவும், நிகழ்த்துதல் அன்பின் பெருக்காலாவதாம் என்பது குறிப்பு. பரிவுடன் கேட்பித்த என்று மேற்பாட்டிற் கூறுவதும் இக்குறிப்புடையது.
உனைப்போற்றி - என்பதும் பாடம்.