சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு நாரி பாகரு நலமிகு திருவரு ணயப்புட னருள்செய்வார் "ஊர னாகிய வாலால சுந்தர னுடனமர்ந் திருவீருஞ் சார நங்கண நாதராந் தலைமையிற் றங்கு"மென் றருள்செய்தார். | 48 | (இ-ள்) சேரர்காவலர்.....கொண்டு - சேரமான் பெருமாள் அன்புடனே கேட்பித்த திருவுலாப்புறப் பாட்டினை ஏற்றுத் திருவுளங்கொண்டு; நாரிபாகரும்.....அருள் செய்வார் - அம்மைபாகராகிய இறைவரும் நன்மை மிகுந்த திருவருளின் விருப்பத்துடனே அருளிச்செய்வாராகி; ஊரனாகிய.....அருள் செய்தார் - நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடனே கூடி விரும்பியிருந்து நீவிர்கள் இருவீரும் சார நமது கணங்களுக்கு நாயகராகிய தலைமை பெற்று இங்குத் தங்குவீராக என்று அருளிச்செய்தனர். (வி-ரை) திருவருள் நயப்பு - திருவருளால் மேற்கொண்ட பெருவிருப்பம். நாரிபாகரும் - அருள் மிகச் செய்யும் முகமாக என்பது குறிப்பு. "நேரிழை வலப்பாகத் தொன்று மேனியர்" (4270); "மங்கை பாகர்" (4273) என ஈண்டு முன்னரும் இவ்வாற்றாற் கூறியமை காண்க. ஊரனாகிய ஆலாலசுந்தரனுடன் - இங்கு முன் ஆலாலசுந்தரனாக இருந்து, நமது ஆணையின்படி தென்றிசையிற் சென்று, நம்பி ஆரூரனாகி மீண்ட என்பது. ஆகிய - ஊரன் என்ற பெயருடைய தொண்டனாகிய; ஆரூரன் என்பது ஊரன் என நின்றது. (32-4277 பார்க்க.) இருவீரும் - இணைபிரியாது என்ற குறிப்புடையது. தங்கும் - மீளாநிலை பெற்றுத் தங்கியிருப்பீராக. சாருநங் கணநாதர்தம் - என்பதும் பாடம். |
|
|