அன்ன தன்மையி லிருவரும் பணிந்தெழுந் தருடலை மேற்கொண்டு மன்னும் வன்றொண்ட ராலால சுந்தர ராகித்தாம் வழுவாத முன்னைநல்வினைத் தொழிற்றலை நின்றனர்; முதற்சேரர் பெருமானும் நன்மை சேரர்கண நாதரா யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார். | 49 | (இ-ள்) அன்ன....மேற்கொண்டு - அத்தன்மையிலே இரு பெருமக்களும் பணிந்து எழுந்து இறைவரது திருவருளினைத் தலைமேற்பூண்டு ஏற்றுக்கொண்டு; மன்னும்....நின்றனர் - நிலைபெற்ற வன்றொண்டப் பெருமான் ஆலாலசுந்தரராகித் தாம் வழுவாதியற்றிய முன்னை நல்வினையின் தொழிலினில் நிலைநின்றனர்; முதற்சேரர் பெருமானும்.....தொழில் பூண்டார் - முதன்மையுடைய சேரனாரும் நன்மை சேரும் சிவகணநாதராகி அவர்கள் செய்யும் விருப்பமிக்க திருத்தொண்டினை மேற்கொண்டனர். (வி-ரை) அன்ன....மேற்கொண்டு - முன்கூறிய அவ்வாறு; முன் பாட்டுக்களில் இவ்விருவரையும் பற்றிக் கூறிய நிலை; அருள் தலை மேற்கொள்ளுதலாவது - அருளியவாறே மேற்கொண்டொழுகுதல். மன்னும்.....நின்றனர் - நம்பிகள் தமது முன்னை நிலையில் உள்ள ஆலாலசுந்தரராகிய நிலையிற்செய்த திருத்தொண்டு பூண்டு நின்றனர். மலர்மாலை சாத்தியும், திருநீறு எடுத்து ஏந்தியும் வரும் செயல்கள். (31) முதற்சேரர்.....பூண்டார் - இது சேரமான் பெருமாள் மேற்பூண்டு கயிலையிலமர்ந்த நிலை. அவர் செய்யும் தொழில் - அவர் - அக்கண நாதர்கள்; அவர் தாம் முன் செய்த என்றுரைத்தலுமாம். அவை முன் (3755 - 3770 - 3756 - 3771) உரைக்கப்பட்டன. நயப்பு - அன்புடன் கூடிய விருப்பம். முதல் - மூவேந்தருள் முதன்மை. (4264). |
|
|