பாடல் எண் :4278

தலத்து வந்துமுன் னுதயஞ்செய் பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி யாருட னனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள்
கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்.
50
(இ-ள்) தலத்து......மிக்கவர் - இந்நிலவுலகத்தில் வந்து முன் அவதரித்த பரவையார் - சங்கிலியார் என்ற பெயர்பூண்ட நன்மைமிக்க இருவரும்; வல்வினை.....அனிந்திதையாராகி - வலிய வினைப்பாசம் நீங்க உமையம்மையரது திருவருளினாலே முன்னை நிலையில், செம்பஞ்சூட்டிய மெல்லிய அடியினையுடைய கமலினியாருடனே அனிந்திதையார் என்ற பெயருடைய சேடியர்களாகி மலைமகளாராகிய அம்மையாரது கோயிலில் தாம் முன்னர்ச் செய்த திருத்தொண்டின் வழியே நிலைபெற்றனர்.
(வி-ரை) நம்பி ஆரூரர் ஆலாலசுந்தரராகித் தமது முன்னைத் திருத்தொண்டின் வழியே நின்றதனை முன்உரைத்த ஆசிரியர், இதுவரை கூறிவந்த காவிய வரலாற்றினை முடித்துக் காட்டும் வகையாலே, கயிலையினின்றும் ஆணையின்படி ஆலாலசுந்தரருடனே அவர் பொருட்டுத் தென்றிசையிற்றோன்றி அவரை மணந்த இரு சேடியர்களும் மீண்டு தத்தமது முன்னைத் தொழில் வழிநின்றதனை இப்பாட்டாற் கூறிமுடிக்கின்றார். தம்தொழில் - முன்னை நிலையிற் செய்த திருநந்தனவனத் தொழில் செய்தலும், மாலை தொடுத்துச் சாத்துதலும், இறைவியார் திருமுன்பு பாடலாடல் பயிலுதலும் முதலாயின. (33 - 34 - 35). அலத்தகம் - செம்பஞ்சு; இங்கு அதன் குழம்பைக் குறித்தது.
வல்வினைத்தொடக்கற - "காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்" (35) என்றதனாற் றொடங்கிய வில்வினைத் தொடர்பு.
கமலனியாருட னனிந்திதையாராகி மலைத்தனிப் பெருமான் மகள் கோயிலில் - வழி நின்றார் - தோற்று முறையில் இக்காவிய முகப்பில் 1. ஆளுடைய நாயகி (33)்,
2. அனிந்திதை, 3. கமலினி (34) என்று கூறினர்; இங்குக் காவிய நிறைவிடத்தில் (சங்கார) ஒடுக்க முறையில் 3. கமலினியாருடன்; 2. அனிந்திதையாராகி; 1. மலைத் தனிப்பெருமான் மகள் கோயிலில் என்று இம்முறை கூறிய தெய்வக் கவிநலம் கண்டு கொள்க. தலத்து - தலம் - நிலவுலகம்; வல்வினைத்தொடக்கு - கருமகாண்ட விளைவு; அலத்த - செம்பஞ்சு ஊட்டிய.
வழிநிற்றல் - அவ்வழியே நிலைபெறுதல்.