பாடல் எண் :4280

சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத் திருவுலாப் புறமன்று
சாரல் வெள்ளியங் கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப்
பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
52
(இ-ள்) சேரர்.....திருவுலாப்புறம் - சேரர்பெருமான் விண்ணப்பித்தருளிய அந்தத் திருவுலாப் புறப்பாட்டினை; அன்று....தரித்து - (விண்ணப்பித்த) அன்று சாரல்களையுடைய வெள்ளியங் கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட - மாசாத்தனார் - அதனைத் தரித்து; இந்த.....பகர்ந்து - இந்த நிலவுலகத்தில் வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிப்படச் சொல்லியருளி; எங்கும்.....நலத்தாலே - நீர்மிகுதியுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுகினில் எங்கும் நன்மையாலே விளங்கியிட நாட்டியருளினர்.
(வி-ரை) நம்பிகளது பதிகம் வந்து வழங்கிய வரலாற்றினை விளக்கிய ஆசிரியர், அஃதற்றாயின், கயிலையில் இறைவரது திருமுன்பு சேரனார் கேட்பித்த திருவுலாப்புறம் இந்நிலவுலகில் வந்து வழங்குமாறு யாங்ஙனம்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு, அவ்வரலாறு கூறியது இத்திருப்பாட்டு.
சேரர்....திருவுலாப்புறம் - சேரனார் திருகயிலையில் இறைவர் திருமுன்பு கேட்பித்த திருவுலா. (4275).
கயிலையிற் கேட்ட மா சாத்தனார் - கயிலை மலையில் அன்று உடனிருந்து கேட்ட மாசாத்தனார். ஐயனார் - அரிகர புத்திரர் என வழங்கப்படுவர். தரித்து - முற்றும் மேற்கொண்டு எடுத்து; சாத்தன் - தீயோரைத் தண்டிப்பவன்; சாத்திரங்களில் வல்லவன்.
பிடவூர்தனில் வெளிப்படப்பகர்ந்து - எங்கும் விளங்கிட நாட்டினர் - பிடவூரினில் வெளிப்படப் பகர்ந்த வகையினாலே உலகில் விளங்கிடச் செய்தருளினர். நாரம் - நீர். நாரம் - நார்களின் தொகுதி - மக்கட் கூட்டம் எனினுமாம்.