பாடல் எண் :3856

மன்னுமிரா மேச்சரத்து மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச் சரஞ்சார்ந்த
சொன்மலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதமர்ந்தார்,
109
(இ-ள்) மன்னும்...பயில்கின்றார் - நிலைபெற்ற திருவிரா மேச்சரத்தில் எழுந்தருளிய பெரிய சிந்தாமணி போன்றவராகிய இறைவரை முன் வணங்கித்துதிக்கின்ற தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினைச் சாத்தி, அப்பதியினில் சேரனாருடன் தங்குகின்றாராகிய நம்பிகள், பாம்பணிந்த...சாத்தி - பாம்புகளை அணிந்த திருமுடியினையுடைய இறைவர் எழுந்தருளிய (ஈழநாட்டிலுள்ள) மாதோட்டத்துத் திருக்கேதீச்சரத்தினைச் சிந்தித்த சொன்மலர் மாலைகளாகிய திருப்பதிகத்தினைப் பாடிச் சூட்டியருளி; தூரத்தே தொழுதிருந்தார் - (கடல் இடைப்பட்டபடியால்) தூரத்தில் அங்கு நின்றபடியே தொழுது எழுந்தருளியிருந்தனர்.
(வி-ரை) தமிழ்த் தொடை சாத்தி - நம்பிகள் பாடியருளிய பதிகம் கிடைத்திலது!
பயில்கின்றார் - பயில்கின்றாராகிய நம்பிகள்; வினைப்பெயர். பயிலல் - தங்கியிருத்தல்.
மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம்; மாதோட்டம் - ஊர்ப்பெயர். கேதீச்சரம் - கோயிலின் பெயர்; “மாதோட்ட நன்னகருள்Ó (நம்பி); “கடற்கரையினி லெழிறிகழ் மாதோட்டங் கேடிலாத கேதீச்சரம்Ó, “மாதோட்டத் தண்ண னண்ணு கேதீச்சரம்Ó (பிள்ளையார்) என்பன முதலாக வருவன காண்க.
சார்ந்த - மனத்தினாற் சிந்தித்துச் சார்ந்த - மாலைகள்; மாலைகள் பதிகத்துள் ஒவ்வொரு பாட்டும் ஒரு மாலையாம் என்பது கருத்து. தூரத்தே தொழுதமர்ந்தார் - கடலிடையிட்டமையால் திருவிராமேச்சுரக்கரையினின்றபடியே இப்பதியினை எண்ணித் தொழுது பாடினாராதலின் தூரத்தே என்றார்; திருக்காளத்தியி னின்றவாறே ஆளுடைய பிள்ளையாரும், நம்பிகளும் வடநாட்டுப் பதிகளை வணங்கிப் பாடியருளிய வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன.
சார்ந்து - என்பது பாடமாயின் மனத்தால் நினைந்தமையால் உள்ளம் சார்ந்து என்க.