பாடல் எண் :3859

அங்கணரைப் பணிந்துறையு மாருரர்க் கவ்வூரிற்
கங்குலிடைக் கனவின்கட் காளையாந் திருவடிவாற்
செங்கையினிற் பொற்செண்டுந் திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேட மென்புருக முன்காட்டி,
112
(இ-ள்) அங்கணரை...ஆரூர்க்கு - இறைவரை வணங்கித் தங்கியிருந்த நம்பிகளுக்கு; அவ்வூரில்...திருவடிவால் - அவ்வூரில் இரவிலே கனவில் வெளிப்பட்டுக் காளையாகிய திருவடிவத்துடன் தோன்றி; செங்கையினில்...முன்காட்டி - செங்கையிலே பொற் செண்டும், திருமுடியிலே சுழியமுமாகிய இவற்றுடன், எங்கும் காணமுடியாத திருவேடத்தினை எலும்பும் உருகும்படி முன்னே காட்டி,
(வி-ரை) அவ்வூரில் - திருச்சுழியலில்.
பணிந்துறையும் ஆரூரர்க்கு - பணிந்துறைந்தவராகிய ஆரூரருக்கு. ஆரூரருக்குக் - காட்டி - கழறி - அகல என மேல்வரும் பாட்டுடன் கூட்டி உரைக்க.
காளையாம் திருவடிவால் - காளையாகிய திருவடிவத்தினை மேற்கொண்டு இதனால் இவருக்குக் காளீசுவரர் - காளைநாதேசுவரர் - எனப்பெயர் வழங்கும். பொற்செண்டு - வளைவுகளுடன் பிளந்து நீண்ட நுனியினையுடைய பிரம்பு; “செண்டுகையேந்திÓ (1159) பார்க்க.
சுழியம் - ஆண்மக்களுட் சிறந்தார்க்குரிய தலையணிவிசேடங்களுள் ஒன்று; “சுந்தரச் சுழியஞ் சாத்திÓ (330) பார்க்க. “கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்" "பூவுயர் சென்னியனை""கோல நறுஞ்சடையிற் கொத்தலரு மிதழித் தொத்தும்Ó என்பன முதலிய பதிகக் குறிப்புக்கள் காண்க.
கனவு - இது வைகறைக் கனா.
எங்குமிலா - வேறெங்கும் கண்டிராத - காண இயலாத. எங்குமிலாத் திருவேடத்தின் அருட் காட்சியினைப் பதிகத்துள் விரித்தல் காண்க.
என்பும் உருக என்று உம்மை விரிக்க; முன் - உணரும்படி வெளிப்படையாக. என்பும் - உருகாத எலும்பும் உருகும்படி என்று உம்மை உயர்வு சிறப்பு. இஃது அன்பின் மிகுதியாலாகுவது. “அன்புள் ளுருகி யழுவ னரற்றுவன்; என்பு முருக விராப்பக லேத்துவன்Ó (திருமந்); “என்பின் புரையுருக்கிÓ “எற்புத் துளைதொறு மேற்றினன்Ó (திருவாசகம்); என்புருகக் கண்ட தன்மைகளைப் பதிகத்துள் “கண்குளிரக் கண்டுÓ “அன்பு பெருத்துÓ “உன்னி மனத்தயராவுள்ளுருகிÓ என்பனவாதியாக வரும் குறிப்புக்களிற் கண்டுகொள்க.