பாடல் எண் :3873

நிலைச் செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல் கண்டருளி வென்றிபெற
மலைக்குநெடு முட்கணைக்கால் வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளி னமர்விரும்பி யமர்கின்றார்.
126
(இ-ள்) நிலைச்செண்டும்........மகிழ்வெய்தி - நிலைச்செண்டு வீசுதலும் பரிச்செண்டு வீசுதலும் ஆகிய விளையாட்டுக்களை விரும்பிச் செய்து மிகவும் மகிழ்ச்சி யடைந்து; விலக்கரும் .....கண்டருளி - விலக்குதற் கருமையாகிய போர் செய்யும் ஆட்டுக்கடாக்களின் பாய்ச்சலைக் கண்டும்; வென்றிபெற....மகிழ்ந்தருளி - வெற்றி பெறும் பொருட்டுப் பொரும் நீண்ட முள்ளையுடைய கணைக்காற் கோழிகளின் போரினைக் கண்டு மகிழ்ந்தும்; அலைக்கும்....அமர்கின்றார் - அவ்வாறே பொரும் வலிய பல புட்களின் போரினை விரும்பியும் அங்குத் தங்கி யிருக்கின்றாராகி;
(வி-ரை) நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசி - செண்டு வீசுதல் - இந்நாளில் பந்தாடுதல் போன்றதொரு விளையாட்டு வகை. செண்டூ - பந்துபோன்ற விளையாட்டுக் கருவி. நிலைச்செண்டு வீசுதல் - நின்றபடியே வீசுதல் பரிச்செண்டு குதிரையின் மீதிவர்ந்து இடம் வலம் சுழன்று வீசியாடுதல். இந்நாளின் (Hockey), அவ்வகை ஆடல்கள் காண்க. இவை ஆண்மக்களின் ஆடல் வகை; கழல், பந்து, அம்மானை, தோணோக்கம், ஊசல் முதலியவை பெண்களின் ஆடல் வகை; இந்நிலைகள் மாறி ஆண் விளையாடல்களைப் பெண்களும், பெண்கள் ஆடும் பந்து முதலியவற்றை ஆண்களுமாகக் கையாளப்பட்டு வழங்குதல் பிற்காலத்தின் பிறழ்ச்சி. முன்னாளின் ஆடல் வகைகள் ஆண் பெண்களின் உடலமைப்புக்களுக்கும் இயற்கைக்கும் ஏற்ப வகுக்கப்பட்டன. செண்டு - நுனி வளைவுள்ளதோர் நீண்ட ஆடற் கருவியுமாம்.
தகர்ப் பாய்ச்சல் - வாரணப்போர் - புள்ளின் அமர் - இவைகள் இந்நாட்டில் மக்கள் உல்லாசப் பொழுதுபோக்கிற்கு மேற்கொண்ட ஆடல்கள்; இவை முன்னாளில் உயர்குடி மக்களின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தன. இந்நாளில் இவற்றைச் சூதுபெரும் தன்மையிற்படுத்திக் கீழ்நிலை மாக்கள் ஆளும் வகையில் தாழ்த்திவிட்டார்கள். செல்வர்கள் கண்டு மகிழ்ந்து பாழ்படும் குதிரைப்பந்தயம் முதலியவை இங்கு நினைவுகூர்ந்து ஒப்பிடற்பாலன. ஆனால் இவ்வகைகளில் இப்போது காணப்படும் இழிபுகள் முன்னைநாளில் தொடர்தலில்லை. “பொருநகர் தாக்கற்குப் பேருந்தகைத்துÓ (குறள்), “யானைவெம் போரிற் குறுந்தூறெனÓ (திருவா) என்பன முதலியவற்றா னறியப்படுகின்றபடி இவற்றினின்றும் மக்கள் கண்டு பயன்பெறும் பல உண்மைகளையும் இவற்றுட் கண்டு உலகை உய்வித்தார்கள் பெரியோர். புறப்பொருளியலில் இவ்வகை ஆடல்களையும் போர்களையும் பற்றிக் கூறுவனவும் காண்க. “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்Ó (குறள்); புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றையும் காண்க.
விலக்கரும் போர் - வென்றி பெறமலைக்கும் - அலைக்கும் மறம் - என்பன அவ்வப்போர்களின் விடாமுயற்சி முதலிய பண்புகளை விளக்கும் அடைமொழிகள்; பிறிதினியைபு நீக்கிய விசேடணங்கள்.
முட்கணைக்கால் வாரணம் - கணைக்காலில் முன்போலக் கூரிய நீண்ட ஒரு அங்கமுடைய கோழி; தகர் - ஆடு.
மறப்புள் - காடை - கவுதாரி - சிவல் முதலாயின. “கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப், பக்கமுன் போதுவார்கள்Ó (333)
அமர்கின்றார் - மேவும் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டிப் பொருள் கொள்க; அமர்கின்றார் - அமர்கின்றாராகி - முற்றெச்சம்.