பாடல் எண் :3878

வடகரையிற் றிருவையா றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங் காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.
131
(இ-ள்) வடகரையில்.....தோன்ற - காவிரிக்கு வடகரையில் திருவையாறு எதிரே தோன்றுதலும்; மலர்க்கரங்கள்....குவித்தருளி - உடலும் உள்ளமும் உருக மலர் போன்ற கைகளைத் தலையின் மேலே கூப்பியருளி; கடல்..நினைவுற்றார் கடல் பெருகி வந்த தென்னும்படி பெருகிவரும் காவேரி யாற்றினைக் கடந்து வடகரையில் ஏறிச்சென்று இடையறாத தொடர்பு பூண்ட இறைவரது திருவடியைத் தொழுவதற்கு நினைவுகொண்டனர்.
(வி-ரை) வடகரை - காவிரியின் வடகரை; இவர்கள் தென்கரையில் திருக்கண்டியூரினின்றும் போதுகின்றபோது அங்கு நின்றவாறே வடகரையில் அணிமையில் திருவையாறு தோன்றியது.
உடல் உருக உள் உருக உச்சிமேல் மலர்க்கரங்கள் குவித்தருளி என்க - ஊனு முயிரும் உருக நினைந்து கைகூப்பி.
கடல் பரந்ததெனப் பெருகும் காவிரி - அப்போது காவிரி பெருவெள்ளமாகப் பெருகியதென்பது; இதன்நிலை மேல் (3880) உரைக்கப்படுவது காண்க. கடல் - நெடுந்தூரம் ஆற்றின் வழியே பெருகி வந்து பரவியதோ என்னும்படி; “கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல் வைகித், திடலேறிச் சுரிசங்கம் வெண்முத்தங் கீன்றலைக்குந் திருவை யாறேÓ என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
கடந்தேறி - இடையில் ஓடும் இவ்வாற்றினைக் கடந்து வடகரையில் ஏறி என்பதாம்.
தொடர்வுடைய திருவடி - ஆட்கொள்ளப்பட்ட தொடர்பு. உயிர்களை விடாது பற்றித் தொடர்ந்து உய்விக்கும் திருவருளுமாம். “உடைய அடிகளோ?Ó என்ற பதிகக்குறிப்புமாம். பதிகம் பார்க்க.