பாடல் எண் :3880

ஆறு பெருகி யிருகரையும் பொருது விசும்பி லெழுவதுபோல்
வேறு நாவா யோடங்கண் மீது செல்லா வசைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார் தரியா தழைத்துப் பாடுவார்.
133
(இ-ள்) ஆறு...போல் - ஆறு பெருக்கெடுத்து இரண்டு கரையினையும் அலைத்து ஆகாயத்தில் எழுவது போல, வேறு கப்பலாவது ஓடங்களாவது மேற் போகாதபடி மிகுத்துச் செல்ல; நீறு.....செலவுரியார் - திருநீறு விளங்கும் திருமேனியினையுடைய இறைவரது திருவடிகளைப் பணிந்து அன்பின் ஆற்றின் வழியாகச் செல்லும் உரிமையுடைய நம்பிகள்; தரியாது......பாடுவார் - தரிக்கலாற்றாது இறைவரை விளித்துப் பாடுவாராகி.
(வி-ரை) ஆறு........மிகைப்ப - ஆறு பெருகிய நிலையினை விரித்துக் காட்டியவாறு.
இருகரையும் பொருது - பொருதல்- நீர்பெருகி அலைத்து ஓடும் வேகத்தால் கரையினை இடித்துத் தள்ளி ஓடுதல்; இருகரை - இறங்குதல் ஏறுதல் இரண்டும் கூடாமை குறித்தற்கு.
விசும்பில் எழுவது போல் - வானில் முட்ட உயர்வது போல்; ஆறு - குளம் - முதலிய நீர் நிலைகளின் நீர்ப் பெருக்கம் சுருக்கம் இவற்றை உயரத்தால் அளந்து காணும் (High Flood level - Low flood level- feet of water ) வழக்குக் காண்க.
வேறு நாவாய் ஓடங்கள் - இங்கு நாவாய் என்றது பெருந்தோணி என்ற பொருளில் வந்தது. வேறு - ஆறு கடத்தற்குரிய எவ்வகையும்; மீதுசெல்லுதல் - ஆற்றின் நீர்ப்பரப்பை மேற்கிழித்துச் செலுத்தப்படுதல்; செல்லுதல் - செலுத்தப்படுதல்; செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது.
மிகைப்ப - மிக்குச்செல்ல; பெயரடியாய்ப் பிறந்த வினையெச்சம்.
அன்பின் ஆறு நெறியாச் செலவுரியார் - நம்பிகள்; செல்லும் வழியாக இவர் சேறும் ஆறு பௌதிகமாகிய இந்த ஆறன்று; இதனின் மேம்பட்டு, இதுவேயன்றி வேறு யாண்டும் செல்லும் சிவன்பால் அன்பாகிய ஆறு ஆகும்; அதனை வேறு எதுவும் குறுக்கிட்டுத் தடுக்க இயலாது என்பதாம்; ஆறு - நதி என்றும், வழி என்றும் இருபொருளும்பட வந்தது கவிநயம்
தரியாது அழைத்து - சென்று பணிதற்கு ஆறு தடைசெய்யக் கண்டமை தரிக்கலாற்றாது.
அழைத்துப் பாடுவார் - பாடுவாராகி - முற்றெச்சம்; அழைக்கும் பண்பிற் பாடுவாராகிப் - பாடுதலும் என்று வரும் பாட்டுடன் கூட்டி உரைக்க.
நிருத்தர் - “ஆடுமாறு வல்லானுமை யாறுடை யையனேÓ (தேவா) என்ற ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கும், “நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு வுள்ளத்து நிலைமை தோன்றÓ (2201) என்ற அதன் வரலாறும் இங்கு நினைவு கூர்தற் பாலன; மேலும் “மன்றி னிறைந்து நடமாட வல்லார்Ó (3882) என்பது காண்க.
நீறு விளங்கும் திருமேனி - சங்காரஞ் செய்து இன்பம் செய்யும் குறியீடாக விளங்குவது திருநீறு; சிவனைப்பணிதற்கு இடையூறாகிய தடையைப் போக்கி இன்பந்தரும் குறிப்புத்தர இவ்வாற்றாற் கூறினார். நிருத்தர் என்று அருள் ஐந்தொழிற் கூத்துத் குறித்துக் கூறியது மிக்குறிப்பு.