பாடல் எண் :3923

ஆழி மாநிலத் தகிலமீன் றளித்தவ டிருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந் தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை யவர்குலக் காவலர் கணநாதர்.
1
(இ-ள்) ஆழி...வனப்பினது - கடல் சூழ்ந்த பெரிய நிலவுலகத்தில் எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரது திருமுலைப்பாலமுதத்தினை உண்டருளியதனால் வாழ்வு அளித்த திருஞானசம்பந்த நாயனார் வந்தவதரித்தருளிய அழகிய பெருமையினை யுடையதாகிய; அளப்பில்லா...மாநகர் - அளவுபடாது ஊழியிற் பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாது மிதந்து நின்று உலகம் மீள உளதாதலுக்கு ஒரு முதலாகிய சீகாழிப்பதியிலே; மறையவர்...கணநாதர் - வேதியர் குலத்தலைவராய் விளங்கியவர் கணநாதரென்பவர்.
(வி-ரை) ஆழி மாநிலம் - கடல் சூழ்ந்த பெரு நிலப்பரப்பாகிய நிலவுலகம்.
அகிலமு மீன்றளித்தவள் - உலகுயிர்களை யெல்லாம் பெற்றெடுத்து வளர்க்கின்றவளாகிய உமையம்மையார்.
வாழி - வாழ்வு தருபவர்; வாழ்வுடையவர்.
வந்தருளிய - வருதற்கிடமாகிய; வருதல் - அவதரித்தல்; வனப்பு - அழகு; ஈண்டு இப்பதிக்கு அழகாவது நன்மக்கட் பேறாக அந்நாயனாரைப் பெறுதல்; ''நன்கலன் நன்மக்கட் பேறு'' (குறள்) “வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகுÓ (1909).
வனப்பினதாகிய - மாநகர் - என்று கூட்டுக. பண்புத் தொகை.
காவலர் - தலைவர்; காத்தலாவது அக்குலத்துக்குரிய மேம்பட்ட சைவவொழுக்க நிலைகளை வழுவாமல் ஓங்கும்படி காத்து வளரச் செய்தல்.
மறையவர் குலம் - நாயனார் அவதரித்த மரபு கூறியவாறு.
வெள்ளத்தும் - உம்மை உயர்வு சிறப்பு. உலகினுக்கு ஒருமுதல் - என்றது உலகம் மீள உளதாதற்கு ஆதரவாயிருத்தல்; பிரம தீர்த்தத்தினைக் “கருப்பம்போல்Ó (1956) என்றதும் காண்க.