பாடல் எண் :3935

அற்றை நாளி லிரவின்க “ணடியேன் றனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டுÓ மெனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளா லவைதாங்கி யுலக மெல்லாந் தனிப்புரந்தார்.
6
(இ-ள்) அடியேன்...துயில்வோர்க்கு - அடியேனுக்கு தேவரீரது மலர் போன்ற பாதங்களை மணிமுடியாகப் பெற்ற பேறு அடியேன் பெறவேண்டும் என்று துதிக்கும் பற்றினை விடாமல் துயில்கின்ற அவருக்கு; அற்றை....கண் அன்று இரவிலே; கனவிற் பாதமலரளிக்க - கனாவிலே இறைவர் தமது பாதங்களை முடியாகச் சூட்டியருள; உற்ற....புரந்தார் - பொருந்திய திருவருளினாலே அப்பாதங்களையே மணிமுடியாகத் தாங்கிக்கொண்டு உலகமெல்லாவற்றையும் தனியாட்சி புரிந்தனர்.
(வி-ரை) அற்றை நாள் - ஐயுறவால் மனந்தளர்ந்து நின்று பணிந்த அன்று. இரவின்கண் - கனவில் என்று கூட்டுக.
பேறு - பேறாக; பேறாகப் பாதம் பெறவே என்க.
பேறு - மணிமுடிகள் எல்லாம் சடப் பொருளாய் அழியுந்தன்மையன; மலர்ப்பாதம் அவ்வாறன்றி ஞானமயமாய் என்றுமழியாத தன்மையுடையது. ஆதலின் பேறு என்றார். “எவற்றையும் ஒருங்கே ஓரியல்பா னறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ் சுடர்முடியும்Ó (போதம் - 8. சிற்றுரை) என்றது காண்க.
பாதமே முடியாகப் பெற்ற பேறு - உமது பாதம் என்னும் ஞானமயமாகிய திருவடியின்கீழ் எனது முடியானது தாடலைபோல் அடங்கி நிற்க என்ற பொருட் குறிப்பும் காண்க.
பற்று விடாது துயில்வோர் - துயிலும்போதும் இந்நினைவு விடாத நிலையில் துயில்வோர்.
பாதமலரளிக்க உற்ற அருளால் - பாதங்களையே முடியாகச் சூட்டியருள அத்திருவருளின் துணையாலே.
அவை தாங்கி - பாதங்களையே முடியாகத் தாங்கிக்கொண்டு.
தனிப்புரந்தார் - ஒப்பற்ற அரசு செலுத்தினார். பொதுக் கடிந்து என்றலுமாம்.
பாதமலர்தாங்கி - உலகு புரந்தார் - இராமனது பாதுகைதாங்கிப் பரதன் உலகாண்டனன் என்ற இராமன்கதைப் பகுதி ஈண்டு நினைவு கூர்தற்பாலது.