பாடல் எண் :3937

காதற் பெருமைத் தொண்டினிலைக் கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக் கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை நடைநூற் பாவி னவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.
8
(இ-ள்) காதல்...அளித்து - பெருவிருப்பமுடைய பெருமையுடைய திருத்தொண்டினிலைத்த கடல் சூழ்ந்த உலகத்தைக் காத்து அரசளித்து; கோது....வணங்கி - குற்றம் நீங்கும்படி முயன்ற களந்தைக் கூற்றுவநாயனாரது திருவடியை வணங்கி, (அத்துணை கொண்டு); நாதமறை....மருவி - நாத உருவாகிய வேதங்களைத் தந்து உலகளிக்கும் இறைவரை நடைநூலின் பாக்களால் சொல்லித் துதிக்கும் சிவபோதம் பொருந்தி; பொய்யடிமை...புகல்வாம் - பொய்யடிமையில்லாத புலவர் என்ற திருக்கூட்டத்திற் சேர்ந்த அடியார்களது செயலினைச் சொல்லப் புகுகின்றோம்.
(வி-ரை) ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிப் போந்த சரிதத்தை வடித்து முடித்துக் காட்டி, இனி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
காதற் பெருமைத் தொண்டு - பெருவிருப்பம் விளைத்தற்கேதுவாகிய பெருமையுடைய திருத்தொண்டு.
தொண்டின் நிலை - இந்நாயனார் திருத்தொண்டின் நிலைத்த தன்மைகள் முன் (3930 - 3935 -3936) கூறப்பட்டன.
தொண்டின் நிலை(யில்) - காத்து - அளித்து - இறைவரது திருவடியே முடியாகக் கொண்டு அரசு செய்து என்ற சரிதப் பகுதி; “அவைதாங்கி - புரந்தார்Ó (3935).
கோதங் ககல முயல் - கோது - ஆணவமலக்குற்றம். “ஆழ்க தீயது; எல்லாமரனாமமே, சூழ்க - வையக முந்துயர் தீர்கவேÓ என்ற திருப்பாசுரம் காண்க.
களந்தைக் கூற்றனார் - “கூற்றன் களந்தைக்கோன்Ó (தொகை); “களப்பாளனாகிய கூற்றுவனேÓ (வகைநூல்); ( களப்பாள் - களப்பாளன் - களந்தை முதல்வன்).
வணங்கிப் (அத்துணை கொண்டு) புகல்வாம் - என்க. அத்துணைகொண்டு குறிப்பெச்சம்.
நாதமறை - நாத உருவின் வெளிப்படுத்தப் பெற்ற மறை. சத்தவடிவம்.
தந்து அளித்தார் - தந்து உலகினைக் காத்த இறைவர். உலகமுய்ய வழிகாட்டி வேதங்களை அருளியவர்.
நடைநூற்பாவின் - நடை - பாக்களுக்கு விதித்த ஒழுங்கு. யாப்பு இயல். நடை - ஒழுக்கம் என்றலுமாம்.
போதம் - சிவபோதம்; பாவினால் நவிலப் பெறுவதெல்லாம் இறைவன் புகழ்களேயாதல் வேண்டும்; ஏனைப்பொருள் எவையும் பாடத்தக்கவையல்ல என்னும் அறிவு. “பொய்ம்மை யாளரைப் பாடாதேÓ (தேவா). “இறைவன் பொருள் சேர்புகழ் புரிந்தார்Ó (குறள்) என்றவிடத்து “இறைமைக் குணங்க ளிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாதலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டதுÓ என்று ஆசிரியர் பரிமேலழகர் உரைத்தவை ஈண்டு நினவு கூர்தற்பாலன.
பொய்யடிமையில்லாப் புலவர் - முதனூற் சொற்பொருள் ஆட்சி. (தொகை)
செயல் புகல்வாம் - தொகுதிப்பட்ட திருக்கூட்டத்து அடியார்களாதலின் சரிதவரலாறாகிய பகுதிகளன்றிச் செயற் பண்பு மட்டின் எடுத்து போற்றுவோம் என்பார் செயல் - என்றார்.
செயல் - செயல்கையின்றிறம்; பண்பு, தன்மை என்ற பொருடந்து நின்றது.