பாடல் எண் :3940

பொற்பமைந்த வரவாரும் புரிசடையார் தமையல்லாற்
சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினின் மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர்

மற்றவர்தம் பெருமையா ரறிந்துரைக்க வல்லார்கள்?
2
(இ-ள்) பொற்பமைந்த ....அல்லாமல் - அழகினையுடைய பாம்புகளை அணிந்த புரிசடையினை உடைய சிவபெருமானை யல்லாமல் (பிறரைப் பற்றி); சொற்பதங்கள்.....பெற்றியினின் - சொற்பொருள்களைச் சொல்லாத தன்மையிற் றிருத்தொண்டின் நெறியினில் முதன்மை பெற்ற பண்பினாலே; மெய்யடிமை.....புலவர் - மெய்யடிமை யுடையாராகும் பெரும் புலவர்களாவார் இவர்கள்; மற்றவர்தம்....வல்லார்கள் - மற்று அவர்களுடைய பெருமையினை அறிந்து உரைக்க வல்லார்கள் யாவர்? (ஒருவருமிலர்)
(வி-ரை) மெய்யடிமை யுடையாராம் - புலவராம் பொதுவியல்பினைப்பற்றி முன்பாட்டிலும், பொய்யடிமையில்லாதாராகும் சிறப்பியல்பினைப் பற்றி இப்பாட்டினும் கூறினார். அவர்கள் திருத்தொண்டத் தொகையினுள் போற்றப்படுதற் கேதுவும் உடன்கூறியவாறு,.
பொற்பமைந்த சடையார் - அரவாரும் சடையார் - புரிசடையார் எனத் தனித்தனி கூட்டுக.
தமையல்லால் - வாய் திறவா - தம்மையே சொல்கின்ற; எதிர்மறையாற் கூறியது உறுதி பயத்தற் பொருட்டு; சொற்பதங்கள் - சொற்பொருள்கள்; வாய் திறத்தல் - பாடுதல், பேசுதல்,
தமையல்லால் வாய்திறவாத் தொண்டுநெறி - சடையாரைப் பாடும் தொண்டு; பாடுதல் வாயிலாகச் செய்யும் தொண்டின் நெறி; பாடுதல் பற்றியன்றி அதனால் வரும் அடிமைத் திறமே இங்குக் கருதப்படுமென்பார். தொண்டுநெறி தலைநின்ற என்று அதனை வற்புறுத்தினார்.
தலை நிற்றல் - ஒருசொல்; சிறத்தல், பெற்றி - நற்பண்பு; நன்மை.
மெய்யடிமை யுடையாராம் - பொய்யடிமை யில்லாதாராய் நிற்றலேயன்றி மெய்யடிமையுடையாராயும் நின்ற என்க.
யார் வல்லார்கள் - ஒருவருமிலர் என்று, வினா எதிர்மறை குறித்தது; மற்று - முன்கூறியபடி எதிர்மறை உடன்பாடு என்ற இருவகையா லறிந்துரைப்பதன்றி வேறு வகையால் என்ற பொருள் தந்து நின்றது.
குறிப்பு: பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்ற இது பற்றிய ஆராய்ச்சி இந்நாளில் பலரை அலைத்து வருகின்றது. முதனூலாகிய திருத்தொண்டத் தொகையிலும், சார்புநூலாகிய புராணத்திலும் அவர்கள் இயற்பெயர் கூறப்படவில்லை. வழிநூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதியில் அவர்கள் நாற்பத்தொன்பது பல்புலவோர் என்றும், கபிலர், பரணர், நக்கீரர் முதலாக வரும் சங்கப்புலவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது; இதுகொண்டு இந்நாள் ஆராய்ச்சி யுலகம், தத்தமக்கேற்றபடி, பலவாறும் ஆய்ந்து அலைகின்றதும், அலைக்கின்றதுமாயிற்று; இப்புலவர் ஒரு கூட்டத்தவரோ அன்றி ஒருவரோ என்று ஐயப்படுவாரும், ஒருவர்தான் என்று துணிவாரும், அவர் மாணிக்கவாசகர் என்று முடிப்பாரு மாயினார்கள் சில ஆராய்ச்சியாளர். இவ்வாராய்ச்சிக் கூற்றுக்களின் பிறழ்வுகளையும் குற்றங்களையும், அபசாரங்களையும் பற்றிச் சில கருத்துக்கள் இங்குக் காட்டவேண்டிய தவசியமாகின்றது.
நூல் என்பது “நூல் போறலின் நூலென்பÓ (போறல் - போலிருத்தல்) பாவைபோல்வாளைப் பாவை என்றதுபோல; நூல்போறலென்பது - நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவன்மகடூஉத் தனது செயற் கை நலந் தோன்ற ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூனூற்ற லென்பது; அவ்வாறே சுகிர்ந்து பரந்த சொற்பாவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரமென்னும் யாப்புநடை படக் கோத்தலாயிற்று. நூல் செய்தலாவது அவ்வாறு நூற்கப்படுதலின் நூலெனப்பட்டது; இனி, ஒரு சாரார் நூல்போலச் செப்பஞ் செய்தலின் நூலென்ப; இனித் தந்திரம் என்று வடமொழிப்பொருளை நூலென வழங்குதல் தமிழ் வழக்கெனக் கொள்கÓ என்பது இறையனா ரகப்பொருளுரை; “பஞ்சுதன் சொல்லாப் பனுவ லிழையாகச் , செஞ்சொற் புலவனே சேயிழையா - வெஞ்சாத, கையேவா யாகக் கதிரே மதியாக, மையிலா நூன்முடியுமாறுÓ.
இனி, இந்நூல் முதல் வழி சார்பு என மூன்று வகைப்படும்; “முதல்வழி சால்பென நூன்மூன் றாகும்Ó; அவற்றுள் முதனூலாவது வரம்பி லறிவன் பயந்ததாகும்.என்னை? “வினையி னீங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்Ó எனவும், ழுமுதல்வ னூற்குப் பிறன்கோட் கூறாது Ó எனவும், “தந்திரஞ் சூத்திரம் விருத்தி மூன்றிற்கு, முந்துநூ லில்லாது முதனூ லாகும்Ó எனவுஞ் சொன்னாராகலின்; இனி அந்நூலொடு ஒத்த மரபிற்றாகி ஆசிரியமத விகற்பம் படக் கிடப்பது வழிநூலெனப்படும்; “என்னை?Ó முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப், பின்னோன் வேண்டுங் விகற்பங் கூறி, யழியா மரபினது வழிநூ லாகும்Ó என்றாராகலின்; இவ்விருவர் நூலுள்ளும் ஒரு வழி முடிந்த பொருளை ஓருபகார நோக்கி ஒரு கோவைப் படவைப்பது சார்பு நூலாகும். என்னை? “இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித், திரிபுவே றுடையது புடைநூலாகும்Ó என்றாராகலின்; புடைநூல் - சார்புநூல்; ஒரு கிழங்கினின் ஒருபுறம் புடைத்து வெளிப்பட்டுவரும் அதன் கன்று போலÓ என்பது (இறையனாரகப் பொருளுரை).
இவ்வகையாலே திருத்தொண்டத் தொகையும், திருத்தொண்டர் திருவந்தாதியும், திருத்தொண்டர் புராணமும் முறையே முதல் - வழி - சார்பு நூல்கள் என வழங்கப்படும். இவ்வழக்கு “மற்றி தற்குப் பதிகம்வன்றொண்டர்தாம், புற்றி டத்தெம் புராண னருளினாற், சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகை யெனப், பெற்ற நற்பதி கந்தொழப் பெற்றதால் (48) “அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை, நந்தநாதனா நம்பியாண்டார் நம்பி, புந்தி யாரப் புகன்ற வகையினால், வந்த வாறு வழாம லியம் புவாம்Ó (49) என்று ஆசிரியர் உரைத்தவாற்றால் வழங்கப்படுவதாயிற்று.
இங்குப் “பொய்யடிமை யில்லாத புலவர்Ó என்று தொகைநூலுட் குறித்த அடியார்களாவார், வழிநூலுட் காட்டியபடி சங்கத்தாருட் சிவனையே பாடிய பல்புலவோரா? அன்றி வேறா? என்பது வினா. வேறென்று கொண்டு, ஆராய்வோர் சார்புநூலுள் ஆசிரியர் தமிழ்ச்சங்கத்தையேனும், புலவர் பெயரையேனும் கூறாமையால் வழிநூலார் கூற்று ஆசிரியர்க்கு உடம்பாடில்லை என்பர்.
முதல் - வழி - சார்பு என்ற பாகுபாடு இம்மூன்று நூல்களுக்கும் வழங்குதல் ஒருசார்பு ஒப்புமை பற்றியேயாம்; உலகியல் வழக்கினுள் வைத்து ஒருமுறையால் உணர்ந்துகொள்ளுதற் பொருட்டே இங்ஙனம் வழங்குவதென்பது. என்னை? இம்மூன்றாசிரியர்களும் பதிபுண்ணியப் பெருவாழ்வுடையராய், மல நீங்கிய சீவன் முத்தராய், வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனார் இவர்களது திருவாக்கினைத் தமது திருவாக்குக்கு ஒப்ப விளங்குதல்பெறு மிடமாகக்கொண்டு வீற்றிருக்கும் பண்பு வாய்ந்தவர்களாய் நிற்கும் திறம்பற்றி என்க. நம்பியாரூரருக்குத் “திருவாரூர்ப் பெருமான் மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை யுணர நல்கி.....அவர்கள் பெருமையை அருளிச்செய்து - அவர்களைப் பாடுகÓ என்றருளித் “தில்லைவாழந்தணர் தம்மடியார்க்கு மடியேன்Ó என்று அடியுமெடுத்துக் கொடுத்தருள. அவ்வருளுருவாய் நின்று நம்பிகள் பாடியருளியது முதனூலாகிய திருத்தொண்டத் தொகையாம்; இனி, “என்னை நினைந்தடிமை கொண்டென் னிடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான்Ó என்றபடி திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரும், “வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன்Ó (திருவந் - 68) என்றபடி ஆளுடைய பிள்ளையாரும் அருளப்பெற்று அறுபத்து மூவர்களது பதி - தே - மரபு - செயல் - பன்ன, அவ்விநாயகர்பா லருள் பெற்று முதனூலின் வழியினையே பற்றி நம்பியாண்டார் நம்பிகளா லருளப்பெற்ற நூலாதலின் திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல் எனப்படும்; இனி, "வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருள்" (9) என்றபடி தில்லையில் நடராசப் பெருமான் "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தருளப் பெற்று முன் கூறிய முதனூல் வழிநூல்களின் வழியே சேக்கிழார் பெருமானால் பாடியருளப்பெற்றது திருத்தொண்டர் புராணமாதலின் ஒருவகையால் அது சார்புநூல் எனப்படும். எனவே இவை மூன்றும் சிவனருள் முழுதும் கைதர ஏற்றபடி வெளிப்பட்டவை என்பது வெளிப்படை. இவ்வாறாகலின் முன்கூறிய முதல் - வழி - சார்பு நூல்களின் இலக்கணப் பாகுபாடுகளும், பின்னோன் வேண்டும் விகற்பம் - ஆசிரிய மதவிகற்பம் - இருவர் நூற்குமொரு சிறைதொடங்கித் திரிபு வேறுடையது - என்று தம்முள் வரும் மாறுபாடுகளும் இவைகட் கேலாதன என்பது வெள்ளிடை மலை; அவ்வாறு மாறுபடின் பதிப்பொருள் தானே ஒன்றைப் பற்றித் தம்முள் மாறுபட்ட பல வாக்கியங்களை வெளிப்படுக்கும் என்ன வரும்; வந்து பதியிலக்கணத்துடன் மாறுபடுமாதலின்.
இனி, இம்மூன்றும் தம்முள் மாறுபடாமை முன்னர் உரை கூறியவிடத்துக் காட்டப்பட்டதும் கடைபிடிக்க.
இனி, இவ்விலக்கண அளவைச் சூத்திரங்களின் படியே வைத்துப் பார்க்கினும், முதல் - வழி - சார்புநூல்களின் பிரமாணவலிமையும் வலியின்மையும் கருதின், வழிநூல் சார்பு நூலினும் வலியுடைத்தாதலின் வழிநூலாகிய நம்பியாண்டார் வாக்கு வலிமை பெற்று, அதன்முன்னர் அதனின்மாறுபட்டு உடன்படாதாகிக் காணப்படும் சார்பு நூலாகிய சேக்கிழார் வாக்கு வலியிலாததாய் ஒதுக்கப்படவேண்டி வரும் இழுக்குப்பட வைப்பது இந்த ஆராய்ச்சியாளர் கூற்றாமென்பது காண்க. அம்மட்டோ? “நங்க ணாதனா நம்பியாண்டார் நம்பி, புந்தியாரப் புகன்ற வகையினால் வந்தவாறு வழாம லியம்புவாம்Ó என்று கூறிய சேக்கிழார் திருவாக்கும் பொய்போயிற் றென்ன வேண்டிவரும் இழுக்குமுண்டாகும். அம்மட்டோ? வழிநூலாசிரியராகிய நம்பியாண்டார் திருவாக்குடன் மாறுபட்ட சார்புநூலுடையாராகிய சேக்கிழார், அவ்வாறு தாம்கொண்ட மாறுபாட்டினை உலகறியக் கூறாது, பொய்யடிமையில்லாத புலவர்கள் சங்கப்புலவருள் சிவனையே பாடுவோ ரல்லாவிடிற், பின்னையாவர்? என்பதை விரித்துரைக்காது மறைத்துப்பொதுப்படக்கூறிப்போந்து உலகை வஞ்சித்தார் என்னவும் வேண்டி வந்து பேரிழுக்காய் முடியும்? அம்மட்டோ? முதனூற் கருத்தை உணராது, நம்பியாண்டார் நம்பிகள்., இப்புலவர் சங்கப்புலவருட் சிவனையே பாடுவோர் என்று பிறழக் கூறினார் என்றும் அதனைத் திரிவுகாட்டி ஒருவாமை வைத்தமையால் அதற்கு எதிர்நூல் செய்தார் எனவும் வந்து இன்னும் பேரிழுக்காய் முடியும்; எதிர்நூலாவது -“எதிர்நூல் என்பதொன்றுண்டுÓ அது யாதோ? வெனின் முதனூலின் முடிந்த பொருளை ஓராசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழ வைத்தால் அதனைக் கருவியாற் றிரிவு காட்டி ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப்படுவது; என்னை? “தன்கோ ணிறீஇப் பிறன்கோண் மறுப்ப, தெதிர்நூலென்ப ரொருசா ரோரேÓ என்றாராதலின்; (இறையனாரகப் பொருளுரை.)
இனி, இப்புராணத்தினுள் வழிநூலார் உரைத்த சங்கம்பற்றியேனும், உதாரணங்காட்டிய புலவரைப் பற்றியேனும் ஒன்றும் சேக்கிழார் பெருமான் கூறிற்றிலர் என்பதொரு கேள்வி பிறக்கின்றது. தில்லைவாழந்தணர், பத்தராய்ப் பணிவார் முதலாகிய தொகை யடியார் புராணங்களெல்லாவற்றினும் ஆசிரியர் சரிதவரலாறு பற்றியன்றிப், பண்பு பற்றியேஉரைத்துப் போகும் மரபு கொண்டவர் என்பது கருதப் படவேண்டும். தொகையடியார்கள் பண்பு பற்றியே உணரப்படுவர் என்ற நிலையும் காண்க.
இனி, இந்த ஆராய்ச்சியாளர்தாம் இங்குக் கூறிய “பொய்யடிமை யில்லாத புலவர்Ó என்பதற்கொள்ளும் பொருள்தான் யாதோ? எனின், அது மாணிக்கவாசரைக் குறிக்கும் என்பதாம்; அற்றாயின் நம்பிகள் ஏனைத் தனியடியார்களைப் பெயர் கூறியாங்கு மாணிக்கவாசகர், வாதவூரனார் என்றிங்ஙனம் எவ்வாற்றாலேனும் பெயராற் உறாது, பொய்யடிமை யல்லாத புலவர் என்று, பண்பினாற் கூறுதற்குரிய காரணந்தான் யாதோ?; புலவர் என்ற அளவை திருவாதவூரடிகளைச் சிறப்பிக்கும் புகழாகுமா?; “கற்றாரை யான் வேண்டேன் கற்பனவு மினியமையும்Ó; “கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்Ó என்றிவ்வாறு கலைப்புலமையைவெறுத்து ஒதுக்கிய பின், இறைவர் தாமே குருவாக வந்துபதேசிக்கப் பெற்றனராய்க் கலைப் புலமையின் மேலாகிய சிவஞானத்தைப் பெற்ற அடிகளாருக்குப் புலவர் என்ற அளவு எங்ஙனம் பொருத்தமுடையதாகும்? இங்குச் சேக்கிழார் பெருமான் “செய்யுணிகழ் சொற்றெளிவும் செவ்விய நூல் பல நோக்கும், மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்துÓ என்று கூறும் இப்புலவர்களின் பண்புக்கும் மணிவாசகனாரது முன்காட்டிய பண்புக்கும் உள்ள வேறுபாடு உணரத்தக்கது. (3939) ஆளானார் - புலவரெனப் புகழ்மிக்கார் - மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர் - ஆங்கவர் (3940) “நடைநூற் பாவி னவின்றேத்தும், போத மருவிப் பொய்யடிமை யில்லாப் புலவர்Ó (3937) என்று கூறிய பன்மைகள் சிறப்புப்பன்மைகளன்றி எண்ணுப்பன்மைகளாதலும் காணத்தக்கது. இனி, இப்புலவர்களை “எண் ணித்தனையென் றறியாத திருக்கூட்ட மெட்டேÓ (திருத்தொண்டர் புராண வரலாறு - 37) என்று உமாபதி சிவாசாரியார் வகைப்படுத்தி யுள்ளமையும் காண்க. இதனால் இவர் தனியடியாராத லன்றித் திருக்கூட்டத்துத் தொகையடியாராதல் நன்கு பெறப்படும். நாற்பத்தொன்பது பல்புலவோர் என்று நம்பியாண்டார் நம்பிகள் குறித்திருக்க, உமாபதி சிவனார் இவர்களை எண்ணித்தனை யென்றறியாத திருக்கூட்டம் என்றதென்னை? எனில், அத்தொகை கடைச்சங்கப் புலவர்களின் ஆசனங்களின் தொகையே யன்றி அவர்கள் தமிழாராய்ந்த 1850 ஆண்டுகளில் வந்த 449 பேர்களில் சிவனையே பாடிய புலவர்களின் தொகையன்றென்பது முன் காட்டப்பட்டது. கடைப்பிடிக்க.
அன்றியும், “பரம காரணன் றிருவரு ளதனாற் றிருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர், ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச், செம்புலச் செல்வர்Ó (பேராசிரியர் - திருக்கோவையாருரை) எனவும், “மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து அருமைக் கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்கு வேண்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோ டொன்றாக்குவர்Ó (இலக்கணக் கொத்து) எனவும் பெரியோர் கூறுகின்றமை கண்டு, அவற்றுடன் இங்குக் கூறும் புலவர் பண்புகளை ஒப்பு நோக்குதல் நலந்தரும். இன்னும் விரிக்கிற் பெருகும்,
பதிபோத முற்ற நிறைந்த அருள் வாக்குடைய எந்தம் பெருமக்களின் திருவாக்குக்கள் எஞ்ஞான்றும் ஒன்றற்கொன்று மாறுபடா; சிவஞானபோதம் - சிவஞான சித்தியார் - சிவப்பிரகாசம் என்ற மூன்றும் பார்க்க. அவ்வாறு மாறுபடுவதாகக் காணில், அப்பிறழ்வுத் தோற்றம், தமது மனக்கண்ணின் குறையாகிய நோய் காரணமாக வருவதன்றி, உண்மையில், அவர்களது திருவாக்கின்கண் உள்ளதன்று என்று அமைந்து திருந்த ஒழுகுதல் குருமரபின் வழிவழி வந்தமைவோர் கடன். அங்ஙனமமையாது, தாந்தாம், பசுபோதமே முன்னிட்ட தமது கோட்பாடே தான்தோன்றிப் பரம்பரையாகி ஆணவ போதமாகிய இவ்வாராய்ச்சியிற் றலைப்பட்டு பதிவாக்கியங்களையும் குறைகாணப் புகுவது பாவம்! பாவம்! பெரும்பாவம்!! இன்னார் திறங்களினின்றும், “அம்மநா மஞ்சு மாறேÓ என்று அஞ்சித் “தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும், பிரட்டரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடேÓ என்றொழுகுக என்பது அன்புடையார்க்கு எந்தம் பெருமக்களதாணை.
இத்துணையும் கூறநேர்ந்தமை அன்புடையார்கள் மயங்கிப் பெருமக்கள்பால் அபசாரப் படாமைப் பொருட்டேயாம்.