பாடல் எண் :3949

அந்நகரிற் பாரளிக்கு மடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்குஞ்
சென்னிநீ டநபாயன் றிருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழ ரெனப்பொலிவார்.
8
(இ-ள்) அந்நகரில்....ஆகின்றார் - அத்திருநகரத்தினைத் தலைநகராகக் கொண்டு வீற்றிருந்து உலகத்தினைக் காவல்புரியும் வலிய அரசராகின்றவர்; மன்னு....வழிமுதலோர் - நிலைபெற்ற திருத்தில்லையம்பதியிலே அழகிய திருவீதிகளில் அழகு விளங்கும் பணிகள் செய்யும் சோழராகிய நீடுவிளங்குகின்ற அனபாயச் சோழருடைய திருக்குலத்தின் மரபு வழியிலே முதல்வராய் விளங்குபவர்; பொன்னி.....பொலிவார் - காவிரியாறு வளம்படுக்கும் சோழர் நாட்டினைக் காக்கும் அரசராகிய புகழ்ச் சோழர் என்ற பெயராற் சிறந்து விளங்குபவர்.
(வி-ரை) இப்பாட்டினால் இப்புராணமுடைய நாயனாரது மரபு விளக்கம் கூறியவாறு.
அந்நகரில் - நகரினைத் தமது அரசமாநகரமாகக் கொண்டு வீற்றிருந்து.
மன்னுதிருத் தில்லைநகர்.....வழிமுதலோர் - இஃது, ஆசிரியர் இப்புராணம் பாடுவித்த பெருமையுடைய தமது அரசரை இப்புராணத்துள் வைத்துப் பாராட்டிய பதினொரு இடங்களுள் ஒன்று. இதுபற்றி எனது சேச்கிழார் 180 - 184 பார்க்க. திருக்குலத்து வழிமுதலோர் - வமிசத்துக்கு வழிமுதலாயுள்ளவர்.
தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும் “தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கியவளவர் போரேறுÓ (1213) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
திருக்குலத்து வழிமுதலோர் - பின்வந்த அரசர்களின் பெருமையினால் வழிமுதல் முன்னோரைப் பாராட்டிப் பெருமை கூறி அறிவித்தல் ஒரு மரபு. கண்டதனைக் கொண்டு காணாததனை அறிவிக்கும் அளவை முறையும், தமது அரசரையும் உடன்போற்றும் முறையும் ஆகிய இருபயன்களை விளைப்பது. “சென்னி வெண்குடை நீடன பாயன் திருக்குலம்Ó (404); “சென்னிவளர் மதியணிந்த சிலம்பணி சேவடியார்தாம் மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர்Ó (1900) என்பன முதலியனவாய் வந்த பல இடங்களிலும் இக்குலச் சைவப்பெருமை போற்றப்பட்டதாதலின் அவையெல்லாம் குறிக்கத் திருக்குலம் என்றார்; வழிமுதல் - வழி வழி முன்வந்த முதல்வர்; வழிக்கு முதல்; வழி - வம்மிசம்; “வழியெஞ்சல்Ó (குறள்).
பொன்னிநதிப் புரவலனார் - நதி - அந்நதி வளம்படுக்கும் நாட்டினைக் குறித்து நின்றது. நதிபுரத்தல் - அந்நதியின் வளம்முழுதும் பெற நாட்டுக் காக்கிக் காத்தல்.
ஆகின்றார் - முதலோர் - பொலிவாராவார் - என்று பெயர்ப் பயனிலை கொண்டு கூட்டி முடிக்க. இங்ஙனம் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்ற மூன்று காலச் சிறப்பும்படக் கூறியது முக்காலத்தும் நிகழும் புகழுடையார் என்று குறித்தற்கு.
அனபாயன் திருக்குலம் என்பது பற்றி ஈண்டுக் கூறியதுபோலவே இந்நாயனாரது தொடர்புடைய எறிபத்தர் புராணத்தும் கூறினார். “அனபாயன் சீர்மரபின் மாநகரமாகும்Ó (552) அங்குக் கூறும் கருவூரும் சோழர் தலைநகரமாதலானும் (3952). இந்நாயனாரது சரிதப் பெரும்பகுதிக ளிரண்டனுள் முற்பகுதி ஆண்டு நிகழ்ந்த தாதலானும் அவை குறிக்க முன்னருங் கூறினார் என்க. சண்டீசர் புராணம் 8-வது திருப்பாட்டிலும் இப்பெருமை கூறுதல் காண்க.