பாடல் எண் :3990

இவ்வகையே திருத்தொண்டி னருமைநெறி யெந்நாளுஞ்
செவ்வியவன் பினிலாற்றித் திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வா ளரவணிந்தார் பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின் மீளாத நிலைபெற்றார்.
8
(இ-ள்) இவ்வகையே....ஆற்றி - முன்கூறிய செயலின் கருத்து வகையாலே திருத்தொண்டினது அரிய நெறியினை எந்நாளிலும் செம்மையாகிய அன்பினாலே செயலாற்றியிருந்து; திருந்திய சிந்தையராகி - திருத்தம் பெற்ற சிந்தனையுடையவராகி; பைவளர்....நிலை பெற்றார் - நச்சுப்பை வளரும் வாளரவை அணிந்த இறைவரது திருவடி நிழலினைச் சேர்ந்து உண்மையாகிய வழியில் வரும் அன்பினாலே மீளாநிலையாகிய முத்தியினைத் தலைக்கூடினர்.
(வி-ரை) இவ்வகை - திருவேடமே மெய்ப்பொருள், ஏனைய உடல் வேடங்கள் பொருளல்ல என்ற உறைப்புப்பற்றி ஒழுகும் வகை; இகரச்சுட்டு முன்கூறிய அன்புச்செயலின் கருத்து வகை; “அது எண்ணுவார்Ó (3989) என்று முன் காட்டப்பட்டது; இவ் வகை - செயல்கள் எவ்வாறாயினும் கருத்து வகையால் இதுவே என்பார் இகரச்சுட்டினாற் கூறினார்; ஏகாரம் - பிரிநிலை.
அன்பினில் - நெறி - ஆற்றி - என்க; நெறி - ஆற்றுதலாவது நெறிவழுவாது நின்று அதன்வழிச் செயலாற்றுதல். ஆற்றித் - திருந்திய - ஆற்றுதலினால் திருந்திய.
பைவளர் - பை - நச்சுப்பை. வளர்தல் - இருத்தல்.
வாளரவு - வாள்போன்ற நீள் வடிவும், கொலைத் தொழில் செய்யும் பண்புமுடையஅரவு; பை... அரவு - அரவுக்கு இயற்கையடை.
மெய்வகைய வழியன்பின் - உண்மைத்தன்மையின் வழிவழியே வரும் அன்பின் றிறத்தினாற் பெறப்படும்.
மீளாதநிலை - முத்தி; “மீண்டு வாரா வழியருள் புரிபவன்Ó (திருவா). “மற்றீண்டு வாராநெறிÓ (குறள்).