பாடல் எண் :3993

தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழன் மாதர்பந் தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக் கருங்கடன் முகந்த
மாமு கிற்குல மலையென வேறுவ மருங்கு.
2
(இ-ள்) தாம நித்திலம்....மாளிகை - முத்துமாலைகளின் கோவைகள் சரிந்திடத், தேன் பொருந்திய மலர்களைச் சூடிய சரிந்த குழலையுடைய பெண்கள் பந்தாடுகின்ற மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன்னொளி மின்னும் மாளிகைகளை; மலையென - இவை மலை என்று மயங்கி; கருங்கடன் முகந்த மாமுகிற்குலம் - கரிய கடல்நீரை - உட்கொண்ட கரிய மேகக் கூட்டங்கள்; மருங்கு ஏறுவ - பக்கத்தில் மேல் ஏறுவன.
(வி-ரை) மாளிகை - மலையென - முகிற்குலம் - ஏறுவ என்று கூட்டுக; மாளிகைகளில் முகில் ஏறுவன என்பதாம்; மாளிகைகள் முகிற் குலத்தால் ஏறப்பெறுவன என்றலுமாம்.
நித்திலத் தாமக்கோவை - தாமம் - மாலைபோல அமைத்த; தாமம் - ஒளி என்றலுமாம். நித்திலம் - முத்து; இங்குக் கடல்படு முத்துக்களைக் குறித்து; கடற்கரையாதலின் அவை இங்கு எளிதிற் பெறக் கூடியவையாதலால்; சரிந்திட - ஆடும் என்க.
சரிந்த - குழல் - மாதர் என்று கூட்டுக. சரிதல் - தொங்குதல்; தெற்றி - மேடை.
சரிந்தீட - சரிந்த - இரண்டு சரிவுகளும் பந்தாடுதலால் ஒருங்கு நிகழ்ந்தன என்பதாம்.
காமர் - அழகிய; விரும்பத்தக்க; பொற்சுடர் - மாளிகையில் அங்கங்கும் இயற்றிய பொன்வேலைப்பாட்டின் விளக்கம்.
மாளிகை மலையென - மாளிகைகளை இவை மலையே என்று மயங்கி; மலையில் ஏறுதல்போல என்றலுமாம். மாளிகைகளின் உயர்ச்சி குறித்தது. கடற்கரையில் இருந்தலால் இக்காட்சி உண்மைக் காட்சியாம் மருங்கு என்றது மருங்கிருத்தலால் என இக்கருத்துப்பட நின்றது.
மாமுகில் - மா - கரிய; “மாமிடற் றம்பலவன்Ó (திருக்கோவை 102); “மா முகடிÓ (குறள் - 617).