பாடல் எண் :3998

உணங்கல் மீன்கவர் வுறுநசைக் குருகுட னணைந்த
கணங்கொ ளோதிமங் கருஞ்சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சிய ரணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின் றிழியல மருளும்.
7
(இ-ள்) உணங்கல்.....அணைந்த - உலர்தலையுடைய மீன்களைக் கவரும் ஆசையினையுடைய பறவைகளுடனே கூட வந்த; கணங்கொள்...அழிந்து - கூட்டமாகிய அன்னங்கள் வளைகின்ற நுண்ணிய இடையினையுடைய நுளைச்சியரது அழகிய நடைக்கு அழிந்து, கரிய கொம்புகளை யுடைய புன்னையங் காட்டிலே; மணங்கொள்...அலமருளும் - மணமுடைய அப்புன்னைமரக் கொம்புகளிலே பக்கத்தினின்றும் இழியாதவையாகி மருண்டிருக்கும்.
(வி-ரை) உணங்கல் - வாடி உலர்ந்த; மீன் கவர் நசைக் குருகுடன் - (மீன்விற்கும் பெண்கள் ஏமாந்த சமயம் பார்த்து) மீன்களைக் கவரும் நோக்கத்துடன் உள்ள பறவைகள். உணங்கல் - காய்தல்.
உடன் அணைந்த ஓதிமம் - ஓதிமம் மீன் கவர்தற்கு வராவிடினும் அவ்வாசை கொண்ட குருகுகளுடன் இனம் பற்றி அணைந்தன; ஆயினும் ‘தீயாரோடிணங்கி யிருப்பதும் தீது’ என்றபடி அத் தீய எண்ணமுடைய குருகுகளுடன் அணைந்தமையால் அலமந்தன என்ற குறிப்புப்படக் கூறினமை காண்க. கணங்கொள் - கூட்டமாகிய; கருஞ்சினைப் புன்னையங்கானல் - கருமை - மிக்க பசுமை கருமையாக் காணுநிலை புன்னையங்கானல் - நெய்தற்கரு; “மட்டிட்ட புன்னையங் கானல்Ó (தேவா). தேவார ஆட்சி போற்றப்பட்டது.
மணங்கொள் கொம்பர் - மணம் - புன்னைப் பூக்களின் மணம். இனிய மணம் மிக்க நிலை; "மட்டிட்ட" (தேவா); ஓதிமம் - அன்னப் புட்கள். அணிநடைக் கழிந்து....நின்றலமருளும் - நுளைச்சியர் நடந்து வந்து இப்புட்களைத் துரத்தும் நிலைக்கு அஞ்சியிருத்தலை நடைக்கழிந்து அலமருதலாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி.
அலமருதல் - வருந்துதல்; இழி - இழிவாகிய; இழியல - இழியாதனவாகி, மருளும் என்பாருமுண்டு; பரத்தியர் மெல்லிய நடையினர் என்பது கருத்து.
கணங்கள் - அசைநடை - என்பனவும் பாடங்கள்.