பாடல் எண் :4005

சால நாள்களிப் படிவரத் தாமுண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந் தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர் தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டரன் பெனுமமு துண்பார்,
14
(இ-ள்) சால..வர - அனேக நாட்களில் இப்படி வர; தாம்...தளரவும் - தாம் உணவு மறந்து வாடி தமது அழகிய திருமேனியும் தளர்ச்சி யடையவும்; தந்தொழில் குறைய.....தெரிந்தே - தமது திருத்தொண்டினின்றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்திலே சலியாது ஒழுகியவரது திறத்தினைத் தெரிந்தே; ஆலம்....உண்பார் - விடத்தினை உண்ட இறைவர் இத்திருத் தொண்டரது அன்பு என்கின்ற திருவமுதத்தினை உண்பாராகி.
(வி-ரை) உணவு அயர்த்து - அயர்த்தல் - மறத்தல்; அயர்ந்து - இழந்து என்க.
தளரவும் - உம்மை சிறப்பு; கூசாது ஆலமுண்டவர்.....அமுதுண்பார் - ஆலமுண்டவராதலின் இத்தொண்டரது அன்புமயமாகிய திருத்தொண்டின் வரும் அன்பமுதத்தினையும் உண்பாராய்; உண்டார் - உன்பார் படுத்தனர் என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க, “மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்குÓ (3684) என்ற சிறுத்தொண்ட நாயனார் புராணமும் காண்க. இங்கு நிவேதித்த மீனுண்டமையும், அங்குப் பிள்ளைக்கறி வேண்டியமையும், அன்பு நுகர்தற்கே யன்றிப் பிறிதில்லை என்பது.
மேனியும் தளரவும் - தொழில் குறையாச் சீலம் - உடல் வலிமையுள்ள அளவே தொழில் இயற்றுதல் உலகரியல்பு. ஆயின் இங்கு இந்நாயனார் மேனியும் தளரவும் தமது தொழில் குறையாம லியற்றும் ஒழுக்கத்தின் நின்றது அன்பின் உறைப்பு; அரிவாட்டாய நாயனார் இறைவரைச் செந்நெல் ஊட்டிய ஒழுக்கத்தினைத்தாம் பசியால் வருந்திய காலத்தும் புரிந்து வந்த அன்பின் செயலும், புகழ்த்துனை நாயனார் உணவின்றி வருந்திக் குடர்ந்தாங்க மாட்டா நிலையிலும் இறைவரைப் பரிந்தாட்டிய அன்பின் செயலும் முதலாயினபலவும் ஈண்டு, நினைவு கூர்தற்பாலன.
சீலமே - ஏகாரம் தேற்றம்; தலைநிற்றல் - சிறக்கச் செய்தல் - இப்படிவா - வருதலால்; மேனி - மேனியும் - உம்மை செல்வம் முதலிய ஏனைய எல்லாவற்றுடன் என்று இறந்தது தழுவிய எச்ச உம்மை; தளரவும் - உம்மை உயர்வு சிறப்பு.
ஆலமுண்டவர் - அமுது உண்பார் - சாதலை விளைக்கும் கைத்த ஆலத்தையும் சாவாமையினை விளைக்கும் இனிய அமுதத்தையும் ஒன்று போலவே உண்பவர் என்று வேண்டுதல் வேண்டாமையிலாத இறைமைக் குணங் குறித்தவாறு; கைப்புடைய ஆலத்தை உண்பவர் அன்புடன் ஊட்டும் அமுதத்தினை விருப்பாராவார் என்றதொரு நயமும் காண்க. இங்கு உண்ணக் கிடைப்பது மீனாகிய அநுசிதப் பண்டமாயினும், கண்ணப்பர் அளித்த இறைச்சியும், சிறுத்தொண்டர் பாற்கேட்க அவர் அளித்தபிள்ளைக் கறியும் போல இனியனவாய்க் கொள்ளப் பெற்றது அவ்வவரது அன்பேயன்றி அப்பண்டங்களின் தன்மையன்று என்பதாம். அது குறிக்க அன்பெனு மமுது உண்பார் என்றார். ஆலமுண்டமையான் அமுதுண்ண ஏக்குற்றார் என்றது கவிநயம்.