பாடல் எண் :4014

ஆன வன்பர் தாமென்று மரனா ரன்பர்க் கமுதுசெய்
மேன்மை விளங்கும் போனகமும் விரும்பு கறிநெய் தயிர்தீம்பால்
தேனி னினிய கனிகட்டி திருந்த வமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன வெல்லா மின்ப முறவளிப்பார்.
3
(இ-ள்) ஆன....தாம் - அத்தகையாராயின அன்பர் தாம்; என்றும் அரனார் அன்பர்க்கு - எந்நாளிலும் சிவபெருமானுடைய அன்பர்களுக்கு; அமுது செய...செய்வித்தே - அமுது செய்வதற்குஉரிய மேன்மையாகிய தன்மை விளங்கும் திருவமுதுடனே விரும்பும் கறிவகைகளும் நெய்யும் தயிரும் இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும் தேனிலுமினிய கனிகளும் கரும்புக்கட்டியும் முதலாகிய இவைகளைப் படைத்துத் திருந்தியவாறு அவர்களை அமுது செய்வித்தே; ஏனை...அளிப்பார் - மற்றும் வேண்டுவனவாகிய பிற நிதியங்களெல்லாவற்றையும் இன்பம் பொருந்த அளிப்பாராய்,
(வி-ரை) ஆன அன்பர் - செய்வித்தே -அளிப்பார் (4014) - தொடங்குவிப்பார் - முயல்கின்றார் (4015) - மனையார் - விளக்கி - அமைத்து - நீரளிக்க - விளக்கும் பொழுதின் கண் - (4015) - ஒருவர் தோன்ற - விளக்கும் - பெருந்தகையார் (4017) - பிடிக்க - மனையார் - வார்க்க முட்டப் - பார்த்துக் - கருதுவார் (4018) - மணங்கொனடு - வாங்கி - வாங்கிக் - கைதறித்து - எடுத்து - விளக்கினர். (4019) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி முடித்துக்கொள்க.
ஆன அன்பர் - முன்பாட்டிற் கூறியபடி ஆயின அன்பர். தேனின் - ஐந்தாம் வேற்றுமை. இன் - உருபு உறழ்பொருளது; ஒப்புப் பொருளுமாம்.
மேன்மை விளங்கு.......திருந்த - திருவமுதுக்கு வேண்டிய இன்றியமையாத பொருள்களை கூறியது காண்க. இளையான் குடிமாற நாயனார் புராணமும் பார்க்க.
கட்டி - கரும்புக்கட்டி; சர்க்கரை; கற்கண்டு; “கட்டிபட்ட கரும்பினும்Ó (அரசு - தேவா) இவற்றை உடன் கூட்டித் திருந்த அமுது செய்வித்தே. மேன்மை - போனகம் - செந்நெலரிசிச் சோறு.
வேண்டுவன - அவர் வேண்டுவனவும் தாமே வேண்டி அளிப்பனவுமாம்.