பாடல் எண் :4017

முன்பு தமக்குப் பணிசெய்யுந் தமரா யேவல் முனிந்துபோய்
என்பு மரபு மணிந்தபிரா னடியா ராகி யங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந் தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றவவர் பாதம் விளக்கும் பெருந்தகையார்,
6
(இ-ள்) முன்பு...போய் - முன்னாள்களில் தமக்குப் பணிவிடை செய்யும் சுற்றமாக இருந்து ஏவற் பணியினை முனிந்து போய்; என்பும்....ஆகி - எலும்பினையும் பாம்பினையும் அணிந்த பெருமானுடைய அடியாராகி; அங்கெய்தும் அன்பருடனே - அங்கு வந்த அடியார்களுடனே கூடி; அணைந்தார்.....தோன்ற - அணைந்தாராகிய ஒருவர் பின்பு வந்து தோன்ற; அவர்.....பெருந்தகையார் - அவர் பாதங்களை விளக்கும் பெருந்தகையாராகிய கலிக்கம்பர் .
(வி-ரை) முன்பு.....தமர் - முன்னர்த் தம்முடைய பணியாளராயிருந்தவர்; ஏவல் முனிந்து - பணி செய்ய மறுத்து.
பிரான் அடியாராகி - மனிதர்க் கடிமை செய்தலினும் சிவனுக் கடிமைசெய்தல் சிறந்ததென்று எண்ணினார் போல என்பது குறிப்பு. முன்னைநிலையில் இவருக்காளாகி ஏவல் செய்த அவர், பிரான் அடியராயினமையால் இவராற் பணி செய்யப் பட்டாராதல் இவ்வுண்மையை விளக்கும். “தொழுத பின்னைத், தொழப் படுந்தேவர்தம் மாற்றொழு விப்பர்தன் றொண்டரையேÓ (திருவா).
பின்பு வந்து தோன்ற - அவர் தமது முன்னைநிலையை எண்ணி நாணிப் பின் வந்தனர் போலும். பாதம் - பாதமும் என உம்மை தொக்கது.
பெருந்தகையார் - முன்னைநிலைமை எண்ணாது, அதனை, அடிமைத் திறத்திற்குக் கீழ்மைப் படுத்தித் தொண்டினிலை ஒன்றனையே கருதியது பெருந்தகைமை எனப்பட்டது. அதுவே இங்கு இவர்பாற் அரிய செய்கையாய் முடிந்து மீளா நிலையில் அடியாருடனிருக்கும் சிவச்சார்புப் பேறு தந்தமையால் இங்குப் பெருந்தகை என்ற தன்மையாற் கூறினார்.
பெருந்தகையார் - கையால் அவர்தம் அடிபிடிக்க என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக.