பாடல் எண் :4027

அக்குலத்தின் செய்தவத்தா லவனிமிசை யவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார்;
தக்கபுகழ்க் கலியனா ரெனுநாமந் தலைநின்றார்;
முக்கணிறை வர்க்குரிமைத் திருத்தொண்டி னெறிமுயல்வார்;
6
(இ-ள்) அக்குலத்தின்......அவதரித்த அந்தக் குலம் செய்த முன்னைத் தவத்தின் பயனாக அதில் வந்து அவதரித்தார்; மிக்க....விளங்கினார் - மிகுந்த பெரியசைவத்தில் மேலோங்க விளங்கினார்; தக்க....தலை நின்றார் - தகுதியாகிய கலியனார் என்னும் பெயர் பூண்டு சிறந்து நின்றார்; முக்கண்.....முயல்வார் - மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு உரிமையாகிய திருத்தொண்டின் நெறியிலே ஒழுகுவாராகி;
(வி-ரை) குலத்தின் செய்தவம் - குலத்தவர் செய்த முன்னைத் தவம் குலத்தின்மேல் லேற்றப்பட்டது; ஆகுபெயர்.
பெருஞ் செல்வத்து மீக்கூர - பெரிய செல்வம் மேலும் பெருகிவர.
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலைநின்றார் - கலியனார் என்ற திருநாமத்துக் கேற்றபடி தகுந்த புகழுடன் சிறந்தார். கலியர் - கலியிற் சிறந்தவர். கலி - வலிமை - வீரம்; புகழாவது - ஈகையால் வருவது. “ஈவார்மே னிற்கும் புகழ்Ó (குறள்); தலை நிற்றல் - சிறந்து விளங்குதல்.
முக்கண் இறைவர் - சிவபெருமான்.
உரிமைத் திருத்தொண்டு - தமது திருக்குலத்தோடு உரிமை பெற்று வருவதாகிய திருத்தொண்டின் தொழில்.
நெறி முயல்வார் - நெறியின் கண் முயல்வார்; முயல்வார் - தொழில் செய்வார் என்ற பொருளில் வந்தது. முயல்வார் -அறிந்து - விளைத்தார் - என மேற்பாட்டுடன் முடிக்க;
அவதரித்து - என்பதும் பாடம்.