பையரவ மணியார மணிந்தார்க்குப் பாவணிந்த ஐயடிகள் காடவனா ரடியிணைத்தா மரைவணங்கிக் கையணிமான் மழுவுடையார் கழல்பணிசிந் தனையுடைய செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம். | 8 | (இ-ள்) பையரவம்...வணங்கி - நச்சுப் பையினையுடைய பாம்பினை மணிமாலையாக அணிந்த இறைவர்க்கு வெண்பா அணிந்த ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது திருவடியிணைத் தாமரைகளை வணங்கி, (அத்துணை கொண்டு); கையணி...விரித்து உரைப்பாம் - கையில் அணிகொண்ட மழுவினை ஏந்திய இறைவரது திருவடியைப் பணியும் சிந்தனையினையுடைய செய்தவம் பொருந்திய கணம்புல்ல நாயனாரது திருத்தொண்டினை விரித்துச் சொல்வோம். (வி-ரை) இது கவிக்கூற்று; ஆசிரியர், தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். இதன்மேல் வருவது சருக்க முடிவில் கூறும் நம்பிகளது துதி. பை - நச்சுப்பை; அரவமாகிய மணிமாலை என்றலுமாம்; மணியையுடைய மாலை. மணி - நாகமணி. ஆரம் - ஆத்தி என்று கொண்டு, அரவத்தினையும் ஆத்தியையும் அணிந்த என்றலுமாம். பா - வெண்பாவாகிய மென்மலர். அரவ மணிந்தார்க்குப் பா அணிந்து - விடமுடைய அரவத்தை வேண்டா என்று விலக்கிப் பா அணிந்தார் போல; “அரவ மொன்று .....பூணாதே - பொன்னார மற்றொன்று பூண்Ó (27 - அற் - அந்,) என்ற அம்மையார் திருவாக்குக் கருதுக. கையணி மழுவுடையார் - கையில் அழகிய மழுவினை ஏந்தியவர்; அணி - அழகிய; மழுவுக்கு அழகாவது சிவனுக்குரிய சிறப்புக் கருவியாகச் செம்மைதரும் இயல்பு. சிந்தனையுடைய தவம் - செய்தவம் - என்க. சிந்தனை மாறாது அருமையாகச் செய்த தவம் நிரம்பப் பெற்ற. |
|
|