பாடல் எண் :4056

அப்பதியிற் குடிமுதல்வர்க் கதிபரா யளவிறந்த
எப்பொருளு முடிவறியா வெய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினா லுலகின்மேம் படநிகழ்ந்தார்
"மெய்ப்பொருளா வனவீசர் கழ"லென்னும் விருப்புடையார்.
2
(இ-ள்) அப்பதியில்......அதிபராய் - அந்தப்பதியில் வாழும் குடித்தலைவர்களுக்கெல்லாம் தலைவராய்; அளவிறந்த....செல்வத்தார் - அளவில்லாத எல்லாப் பொருளும் இவ்வளவின வென்று எல்லைகாண முடியாதபடி பொருந்திய பெருஞ் செல்வத்தையுடையவர்; ஒப்பில்....நிகழ்ந்தார் - ஒப்பில்லாத பெருங் குணத்தினாலே உலகத்தில் மேன்மையுடன் வாழ்ந்தனர்; மெய்....விருப்புடையார் உண்மைப் பொருளாவன இறைவரது திருவடிகளேயாம் என்னும் பேரன்பினை உடையவர்.
(வி-ரை) குடி முதல்வர்க்கு அதிபர் - குடிகள் பலவாக. அவை ஒவ்வொன்றுக்கும் தலைவர் ஒவ்வொருவராக, அத்தலைவர்க்கெல்லாம் இவர் அதிபர் என்பது.
அளவிறந்த எப்பொருளும் முடிவறியா - அளவிறந்த எப்பொருளும் என்பது பொருள்களின் வகைகளையும், முடிவறியா என்பது அவ்வவற்றின் தொகைகளையும் குறித்தன; எப்பொருளும் - உம்மை முற்றும்மை; பொருள் - பொருட்செல்வங்களின் வகை; மக்களுக்கு இன்றியமையாது வேண்டுவனவாகிய பொருள்கள் எல்லாம்; மனை, வயல், நெய், மணி முதலாயின பெருங்குணம் - உலகியல் பற்றிய நற்குணங்கள்.
மெய்ப்பொருளாவன - அழியாத் தன்மையினவாய் அத்தன்மையைப் பயப்பிப்பனவாய் உள்ள தன்மைகள் மெய்த்தன்மை எனப்பட்டது. "எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள்); தம்முடையனவாகிய ஏனைய வெல்லாம் பொருள் அல்ல, இறைவர் கழலே பொருளாவன என்பது; அப்பெருஞ் செல்வமெல்லாம் இறைவர்பால் ஆக்கின அளவே பொருளெனப்படும்; அதன் பொருட்டே தரப்பட்டன என்ற உணர்வு. மேல் வரும் பாட்டு பார்க்க.
நிகழ்ந்தார் - விருப்புடையார் - என்று முடிக்க. பெயர்ப் பயனிலை.