பாடல் எண் :4062

தங்கள்பிரான் றிருவுள்ளஞ் செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியவன் புடனெரித்த பொருவிறிருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்ல ரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்.
8
(இ-ள்) தங்கள்பிரான்....செய்து - (இத்திருப்பணியினைத்) தமது பெருமானார் திருவுள்ளங்கொண்டு; தலை...வைத்தருள - தலைத்திருவிளக்கினை மிகுந்த அன்புடனே எரித்த ஒப்பற்ற திருத்தொண்டருக்கு மங்கலமாகிய பெருங் கருணையினை வைத்தருள; சிவலோகத்து....அமர்ந்திருந்தார் - சிவனுலகத்திலே எங்கள் பெருமானாராகிய கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி வீற்றிருந்தருளினார்.
(வி-ரை) திருவுள்ளம் செய்து - திருவுள்ளத்தில் ஏற்றுவைத்து; திருவுள்ளஞ் செய்து - கருணை வைத்தருள என்று கூட்டுக.
தலைத்திருவிளக்கு எரித்த - தலைக்குஞ்சியினையே திருவிளக்காக எரித்த.
மங்கலமாம் பெருங்கருணை - திருமுன்பு மயிரை எரித்தலும், உடலை எரிவாய் மடுத்து எரித்து உயிர்நீத்தலும் முதலிய செய்கைகள் எங்குச் செய்யினும் அமங்கலமும் அநுசிதமும் ஆம் என்பது பொது விதி; சிவன் கோயிலிற் றிருமுன்பு செய்தல் அதனின் மிக்க அமங்கலமும் அநுசிதமுமாம். ஈண்டுப் பொங்கிய அன்புடனே செய்யப்பட்டமையால் இவையே மங்கலமாகவும் இறைவர்க் குகந்தனவாகவும் ஆகியபடியால் இறைவர் மங்கலமாம் பெருங்கருணை வைத்தனர் என்பதாம்.
சிவலோகத்து - இறைஞ்சி - இச் செயலால் நாயனார் இறைவர் திருமுன்பு தம் உடலை நீத்துச் சிவலோகத்தணைந்தனர் என்பதாம்.
எங்கள்பிரான் - "எந்தை தந்தைபிரான்" (திருவந்தாதி - 58) என்ற வகைநூற் கருத்தினைத் தொடர்ந்து கூறியது.