பாடல் எண் :4067

எய்ந்தகடல் சூழுலகி லெங்குந்தம் மிசைநிறுத்தி
யாய்ந்தவுணர் விடையறா வன்பினரா யணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையவர்த மருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைச்சேர்ந்தார்.
4
(இ-ள்) ஏய்ந்த.......நிறுத்தி - பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் தமது புகழினை நிலைநிறுத்தி; ஆய்ந்த.....அன்பினராய் - ஆராய்ந்து தெளிந்த உணர்விலே இடையறாத அன்புடையவராகி; அணி...தொடர்பினார் - அழகிய கங்கையாறு தோய்ந்த நீண்ட சடையினையுடைய இறைவரது திருவருளைப்பெற்ற தொடர்ச்சியினாலே; வாய்ந்த....சேர்ந்தார் - பொருந்திய மனத்தினாற் சேர்ந்தது போலவே உடம்பினாலும் வடகயிலை மலையினைச் சேர்ந்தனர்.
(வி-ரை) இசை நிறுத்துதலாவது தமது புகழ் நிலைபெறச்செய்தல்.
ஆய்ந்த வுணர்வு - ஆய்தல் - ஆராய்ந்து தெளிதல்; உணர்வு - உணர்விலே; தொடர்பு - பொருத்தம் - காரணம். இடையறா அன்பு - “அயரா அன்புÓ (போதம் -11)
மனம்போலுடம்பும் வடகயிலை மேவுதலாவது - முன்னர் மறவாமையினால் மனம் கயிலையை எப்போதும் சேர்ந்திருந்தது. இப்போது உடம்பும் கூடிச் சீவன் முத்தராய்த் திருக்கயிலை மலையினிற் சேர்ந்தமர்ந்தனர் என்பதாம்.