பாடல் எண் :4086

மறவாமை யானமைந்த மனக்கோயி லுள்ளிருத்தி
யுறவாதி தனையுணரு மொளிவிளங்குச் சுடரேற்றி
இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி
யறவாணர்க் கன்பென்னு மமுதமைத்தர்ச் சனைசெய்வார்.
8
(இ-ள்) மறவாமை.....இருத்தி - (இறைவரை) மறவாமை யாகிய கருவியினால் அமைத்த மனமாகிய கோயிலினுள்ளே எழுந்தருளுவித்து நிலைபெறத் தாபித்து; உற ஆதிதனை....ஏற்றி - பொருந்தும்படி அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கினை ஏற்றி; இறைவாத...ஆட்டி - அழிவில்லாத பேரானந்த மாகிய நீரினால் திருமஞ்சனமாட்டி; அறவாணர்க்கு......அமைத்து - அறத்தின் வாழும் அந்நாயனாருக்கு அன்பு என்னும் திருவமுதை அமைத்து; அர்ச்சனை செய்வார் - பூசிப்பாராய்;
(வி-ரை) இத்திருப்பாட்டு அகப்பூசை விதி விளக்கமாயமைந்த உறுதிப்பாடுடையது. அந்தரியாக பூசை என்று சிவாகமம் கூறும். “அந்தரியாகந் தன்னை ஞான பூசையா யறைவரது தானும் ஆன்மசுத்தி யாகும்Ó என்பது ஞான சாத்திரம்.
மறவாமையான் அமைத்த மனக்கோயில் - மறவாமை என்ற சாதனங்கொண்டு அமைத்த மனமாகிய கோயில் “மனவா லயத்திருத்திÓ என்பது வகைநூல்; “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்Ó (திருமந்திரம்). கோயில் - கருவறை; (கருப்பக்கிருகம்); பெருங்கோயில் என்பது கருவறை (மூலத்தானம்); மற்றைத் திருச்சுற்று முதலியவை ஆலயம் எனப்படும்.
ஆதி - இறைவர்; ஆதிதனை உற உணரும் என்க; உற - பொருந்த; உறவு என்று கொண்டு அவரே உறவாவார் என்பதனை உணரும் என்றலுமாம்.
உணரும் ஒளிவிளக்குச் சுடர் - உணர்வு - ஞானம்; “ஒண்சுடர் ஞான விளக்கினை யேற்றிÓ (தேவா); “அறிவா மொளிவிளக் கேற்றி; வகைநூல்.
இறவாத ஆனந்தம் - ஏனைய ஆனந்த மெல்லாம் ஒருகாற் கெட்டொழிவனவும் கேடுதருவனவுமாம்; சிவானுபவமாகிய ஆனந்தமொன்றே கெடாதது. இறவாத இன்ப அன்பு வேண்டி.Ó (1776)
அறவாணர் - சிவன்; அன்பே - அமுதமாகக் கொண்டு; “மெய்ததன்மை யன்பு நுகர்ந் தருளுதற்குÓ (3684) என்பன முதலியவை பார்க்க. “அன்பெனு மெய் யமிர்தம்Ó - வகைநூல்.
அர்ச்சனை செய்வார் - பூசிப்பாராய்; முற்றெச்சம்.
அமைத்தல் - பாவித்தல்; அகப் பூசைக்குரிய மலர்களை வகைநூல் வகுத்தமை காண்க.
மறவாத வாய்மையால் - என்பதும் பாடம்.