பாடல் எண் :4095

செறிவுண் டென்று திருத்தொண்டிற் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண் டொன்று கிலுங்குறைவொன் றில்லோ நிறையுங் கருனையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்கப்
பறியுண் டவரெம் பழவினைவோர் பறிப்பா ரென்னும் பற்றாலே.
7
(இ-ள்) நிறையும் கருணையினால் - நிறையும் அருட்பெருக்கினாலே; வெறியுண்...பறியுண்டவர் - மணமுடைய சோலை சூழ்ந்த திருமுருகன் பூண்டியின் வழியிலே வேடர்களாற் பறிக்கப்பட்ட நம்பியாரூரர்; எம் பழ....பற்றாலே - எமது பழவினை மூலத்தை அடியோடு பறித்து விடுவர் என்ற ஆசாவினாலே; செறிவுண்டென்று......குறிப்புண்டு - செறிதல் உளதாகு மென்று திருத்தொண்டிலே மனம் செல்கின்ற பயனுக்கும் ஒரு குறியுண்டு; (அஃதன்றியும்) ஒன்றாகிலும்.....ஒன்றில்லோம் - ஒன்றானும் குறைவு சிறிதும் இல்லோம்.
(வி-ரை) செறிவு - மிக்க பயன்; பயனுக்குங் குறியுண்டு - பயன் பெறுநிலைக்கும் குறிக்கோளாகும்....பயன் பெரும் குறிக்கோள்.
ஓன்றாகிலும் குறைவு ஒன்று இல்லோம் - அதுவேயுமன்றி ஒன்றினாலும் ஒரு சிறிதும் குறையில்லோம்; ஒன்று - ஒரு சிறிது என்று அளவு குறித்தது; “எற்றாலுங் குறைவில்லை யென்பர்கரனெஞ்சமேÓ (நம்பி - கோயில்).
பற்றாலே - இத்துணிவுகளிரண்டும் ஆளுடைய நம்பிகளது திருவடிப் பற்றினாலே ஆவன; பற்று - ஆதரவு - அன்பு என்றலுமாம்.
பறியுண்டவர் பறிப்பார் - தாம் பறியுண்டு பழகியவர் அப்பழக்கத்தாற் பிறரைப் பறியுண்ண வைத்தல் எளிது என்ற குறிப்பு. வேடர் பறித்த வரலாறு வகைநூலும் இங்குக் குறித்தது.
பழவினை - மூலகன்மம்; வேர் - முதல்; அதற்குக் காரணமான வாசனாமலம்.
கருணையினால் - பறிப்பர் என இயையும்; கருணையினால் - பறியுண்டவர் என்று கூட்டி, பறியுண்டமையும் சிவனருளாலாகிய என்றுரைக்கவும் நின்றது.
பழவினை வேர் பறிப்பர் - நம்பிகளை வழிபட்டால் பிறவியற்று வீடுபேறு பெறலாம் என்பது.