பாடல் எண் :4108

வையக நிகழக் காதன் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழலினை தொழுது போற்றி
யெய்திய பெருமை யன்ப ரிடங்கழி யாரென் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர் செயலினை விளம்ப லுற்றாம்
13
(இ-ள்) வையக நிகழ - உலகத்தில் விளங்க; காதல்......போற்றி - தமது காதலுடைய பட்டத்தரசியினது கையினைத் தடிந்த சிங்கரது திருவடிகளைத் தொழுது துதித்து; (அத்துணையாலே); எய்திய......விளம்பலுற்றாம் - பொருந்திய பெருமையுடைய அன்பராகிய இடங்கழியார் என்று துதிக்கப்படுகின்ற மெய்யருளுடைய திருத்தொண்டர் செய்த திருத்தொண்டினைச் சொல்லப் புகுகின்றோம்.
(வி-ரை) இது கவிக்கூற்று; சரித முடிப்பும் வருஞ்சரிதத் தேற்றுவாயுமாம்.
வையக.....சிங்கர் - சரிதசாரம்; சிங்கர் - இந் நாயனாரது பெயர்; முன் பெருஞ் சிங்கனார் (4097) என்றது காண்க. கையினைத் தடிந்த -“கைதடிந்தÓ என்ற முதனூலாட்சி (தொகை).
எய்திய பெருமை - பெருமை இவரைத் தேடி வந்தடைந்தது என்பது குறிப்பு; இச் சரிதத்துள் ஓரன்பர் தாமே போந்து இவரது பண்டாரத்தின் நெல்லைக் களவு செய்தேயும் அடியார்க் கமுதளித்த செய்தியும், அதுவேயாறாக நிகழும் செயலும் குறிக்கக் கூறியது தெய்வக் கவிநயம்; “ஆக்க மதர்வினாய்ச் செல்லும்; (குறள்)Ó என்ற கருத்துக் காண்க.
மெய் அருள் - மெய்யினது அருள்; என்றும் பொய்க்காத மெய்யாகிய சிவனருள்;