பாடல் எண் :4122

ஆன வன்பர் திருவாரூ ராழித் தேர்வித் தகர்கோயில்
ஞான முனிவ ரிமையவர்க ணெருங்கு நலஞ்சேர் முன்றினிலுள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங் களின் வணங்கிக்
கூன லிளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவுநாள்,
3
(இ-ள்) ஆன அன்பர் - இவ்வாறான அன்பர்; திருவாரூர்......முன்றிலினுள் - திருவாரூரில் ஆழித்தேர் வித்தகராகிய இறைவரது திருக்கோயிலினுள்ளே ஞான முனிவர்களும் தேவர்களும் நெருங்கியிருக்கின்ற நன்மை பொருந்திய திருமுன்றிலினுள்ளே; மான நிலவு.....வணங்கி - பெருமையுடைய திருப்பணிகளைச் செய்து உரிய காலங்களில் வழிபட்டு வணங்கி; கூனல்.....நாள் - வளைந்த இளையபிறையினைச் சூடிய முடியினை உடைய இறைவரது திருத்தொண்டு விளங்க விளங்கியிருக்கும் நாளிலே,
(வி-ரை) திருவாருர் ஆழித்தேர் வித்தகர் - ஆழித்தேர் - திரவாரூரில் இறைவரது பெருந்திருத்தேரின் பெயர். ஆழி - உருளை (சக்கரம்); வட்டம்; “திருவாரூர்த் தேரழகுÓ என்ற பழமொழியாக விளங்க வழக்கும் சிறப்புடையது; “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரேÓ (தேவா - அரசு).
ஞானமுனிவர்.......முன்றிலினுள் - திருவாரூர்ப்பூங்கோயிலினுள்; தேவாசிரியமண்டபத்தின் முன் “மாவா ழகலத்து மான்முதல் வானவர், ஓவா தென்றும் நிறைந்துறைந்துள்ளதுÓ (137); ஞானமுனிவர்கள் தவஞ்செய்து வழிபடுகின்றார்கள். நெருங்குதல் - பலர் கூடியிருத்தல்.
மானம் - பெருமை; மாட்சிமை; திருத்தொண்டு - திருமுற்றத்தினுள் செய்யும் சரியைத் திருப்பணிகள். முற்றம் விளங்குதல், திருவலகிடுதல், கல் - புல் - முள் முதலியவற்றை அகற்றும் உழவாரப்பணி செய்தல், செடிகளுக்கு நீர் வார்த்தல், களைகட்டுதல் முதலாயின, மானநிலவு - பெருமையோடு விளங்குகின்ற. காலங்கள் - வழிபாட்டுக்குரிய பூசைநேரங்கள்.
தொண்டு பொலிய - திருத்தொண்டின் நெறி சிறந்து விளங்க.