பாடல் எண் :4131

பெற்றமுகந் தேறுவார் பீடத்தின் கீழொருகா
சற்றமடங் கிடவளிப்ப வன்பருமற் றதுகைக்கொண்
டுற்றபெரும் பசியதனா லுணங்குமுடம் புடனுவந்து
முற்றுணர்வு தலைநிரம்ப முகமலர்ந்து களிகூர்ந்தார்.
5
(இ-ள்) பெற்றம்.....அளிப்ப - இடபத்தின் மீத மகிழ்தெழுந்தருளும் இறைவர், பீடத்தின்கீழே துன்பம் நீங்கிட ஒரு பொற்காசு அளித்திட; அன்பரும் மற்றது கைக்கொண்டு -அன்பரும் அதனைக் கையில் எடுத்துக் கொண்டு; உற்ற......உவந்து - பொருந்திய பெரும் பசியினாலே வாடிய உடம்புடன் (கூடிய அளவு) மகிழ்ந்து; முற்றுணர்வு......கூர்ந்தார் - பேருணர்வுகூடி நிரம்ப முகமலர்ச்சி பெற்று மகிழ்சிறந்தார்.
(வி-ரை) அளிப்ப - கனவின்கண் உணர்த்தியவாறே அளித்தருள; அளித்தல் - அளியுடன் கொடுத்தல். அற்றம் - சோர்வு; மெலிவு.
உற்ற.......உவந்து - மகிழ்வதற்குத்தானும் வலியின்றி வாடிய கருவிகரணங்களுடன் கூடியிருந்த நிலையில் கூடிய அளவான் மகிழ்ந்து என்பது. முற்றுணர்வு தலைநிரம்ப - உயிர்களின் கன்ம நிலையும், இறைவரது அருணிலையும், பற்றற்று அவரைப் பற்றியபோது அவ்வருள் வெளிப்படும் நிலையும் முதலிய தத்துவ உண்மை உணர்வுகள் முதிர்ந்த நிலை முற்றுணர்வு எனப்பட்டது; பேருணர்ச்சி; தலை நிரம்புதல் - வெளிப்படப் புலனாகுதல்; மிகுதியுமுண்டாதல்.
காசு - அது கைக்கொண்டு - இவ்வருளிப்பாடு “நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான், சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தானூர், அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப், புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரேÓ (பிள் - காந்தாரம் - அரிசிற்கரைப்புத்தூர் - 7) என்றும், “அகத்தடிமை செய்யு மந்தணன்றா னரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான், மிகத்தளர் வெய்திக் குடத்தைநும் முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும், வகுத்தவ னுக்குதித் தற்படியும் வரு மென்றொரு காசினை நின்றநன்றிப், புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரேÓ (நம்பி - இந்தளம் - புத்தூ - 6) என்றும் ஆளுடையபிள்ளையாராலும் நம்பிகளாலும் சிறப்பித்துப் போற்றப்பட்டது; “திருப்புத்தூர்ப் புனிதனைப் பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந், துரிசி னன்னெறி தோன்றிடுங் காண்மினேÓ “மேனிசெம் பொன்னு மொப்பர்Ó (குறுந்) என்ற அரசுகள் திருவாக்குக்களும் இக்குறிப்புத்தருவன.