பாடல் எண் :4155

புரமூன்றுஞ் செற்ற னைப் பூணாக மணிந்தானை
யுரனில்வரு மொருபொருளை யுலகனைத்து மானானைக்
கரணங்கள் காணா மற் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்.
1
(இ-ள்) வெளிப்படை. அசுரர்களது மூன்று புரங்களையும் எரித்தவரும், பூணாக நாகங்களை யணிந்தவரும், ஞானம் முதிர்ந்த இடத்து வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், எல்லாவுலகங்களையும் தமது மாயாசத்தியால் உளவாக்கியவரும், கருவிகரணங்களாற் காணப்படாதவராயினும் அவற்றுள் நிறைந்து நின்று காட்டுபவரும் ஆகிய பரமனையே பாடுவார்களது பெருமையினைப்பாடுவோம்.
(வி-ரை) உரன் - ஞானம்; ஈண்டுப்பதிஞானம் என்ற பொருளில் வந்தது. “உரனென்னுந் தோட்டியான்Ó (குறள்); உரனில் வரும் - பதிஞானத்தாலறியப்படுபவன்; “உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமேÓ (தேவா).
உலகனைத்துமானான் - உலகமெங்கும் நிறைந்தவன் என்பதுமாம்; ஆனான் - ஆக்கினான். “அவையே தானேயாய்Ó (போதம் - 2).
காணாமல் - நிறைந்தான் - காணமுடியாதபடி அங்கு நிறைந்து நின்று காட்டுபவன்; காணாமல் - பசுஞானத்தால் அறியப்படாதவன்.
செற்றானை - முதலிய ஐந்தினையும் என உம்மைவிரித்து, இவ்வைந்து குணங்களையுமுடைய பரமனையே என்க. ஏகாரம் பிரிநிலை.
இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை.
கண்ணாந்து நின்றானை - என்பதும் பாடம்.