பாடல் எண் :4157

காரணபங் கயமைந்தின் கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையாற் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்த ரடித்தொண்டின் வழியடைந்தார்.
1
(இ-ள்) காரண....கடந்து - பிராமன் முதலாகிய காரணக் கடவுளர் ஐவர்க்குமுரிய ஐந்து தாமரைகளுடனிருக்கும் தானங்களைக் கடந்து மேற்சென்று; (அப்பால்) பூரண...தாரணையால் - நிறைவுடையதாய், உள்பொருளாய், சுயஞ்சோதியாய் உள்ள சிவம் ஞான ஒளிவீசி விளங்கும் நாதாந்தத்திற் சித்தத்தை நிறுத்துதலினாலே; சிவத்தடைந்த சித்தத்தார் - சிவத்தினிடத்தே நிறுத்திய சித்தத்தையுடைமையால் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்கின்றவர்கள்; தனிமன்றுள்...அடைந்தார் - ஒப்பற்ற திருவம்பலத்தினுள் விளங்கும் வேதகாரணராகிய கூத்தருடைய திருவடித் தொண்டின் வழியிலே நின்று அவரை அடைந்தவர் எனப்படுவர்.
(வி-ரை) காரணபங்கயம் ஐந்தின் கடவுளர் தம்பதம் - படைத்தல் முதலிய ஐந்தொழில் செய்யும் பிரமதேவர் முதலிய அதிகாரக்கடவுளராகிய ஐம்பெருங் கடவுளர்களும் இருக்கும் ஐவகைத் தாமரைப்பீடங்களையுடைய பதங்கள்; பதவிகள். காரணம் - ஆதார காரணம்;
கடவுளர் தம்பதம் கடந்து பூரண மெய்ப்பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தம் என்றது இவ்வைந்து அதிகாரக் கடவுளர் பதங்களுக்கு மேலாகிய நாதாந்தத்துட் சிவனிருக்குமிடம்.
நாதாந்தத் தாரணையாவது - நாதாந்த பதத்தினிற் சித்தத்தை நிறுத்துதல். நாதாந்தம் - சுத்த தத்துவங்களாகிய விந்துநாத முதலியவையும் நீங்கிய பரமுத்தியாகிய சிவசாயுச்சியப் பேறாகலான் நாதாந்தம் எனப்பட்டது.
கடந்து....தாரணையாற் சிவத்தடைதலாவது அட்டாங்கயோகத்துள் இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் என்னும் ஐந்தினையும் பயின்று, மேல்,தாரணை - என்ற யோகவழியால் சிவத்தினிற் சித்தத்தை நிலைபெறுத்துதல். இது உடலில் குண்டலித்தானத்திலுள்ள குண்டலிசத்தியைப் பிரணவத்தால் எழுப்பிச் சுழுமுனை வழியாய் மேலே செலுத்துதலாலாம்.
ஐந்தின் கடவுளர்தம் பதங்கடத்தல் என்பது - (1) முதலில் நாற்கோணம் - பொன்னிறம் - லகார அக்கரம் - உடைய பிருதுவியை (மண்) இதயத் தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய பிரமதேவரைத் தியானித்தலும்; பின் அதன் மேற்சென்று (2) இரண்டாவது இருகோணம் (தாமரை என்போருமுண்டு) - வெண்ணிறம் - வகார அக்கரம் உடைய அப்பு (நீர்)வைக் கண்டத்தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய விட்டுணுவைத் தியானித்தலும்; பின், அதன் மேற் சென்று, (3) மூன்றாவது முக்கோணம் - செந்நிறம் - ரகார அக்கரம் - உடைய தேயு(தீ)வை உண்ணாக்கின் தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய உருத்திர மூர்த்தியைத் தியானித்தலும்; பின், அதன்மேற் சென்று (4) நான்காவது, அறுகோணம் - கருநிறம் - யகார அக்கரம் - உடைய வாயுவைப் புருவநடுத் தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய மகேசமூர்த்தியைத் தியானித்தலும், பின், அதன் மேற் சென்று, (5) (ஐந்தாவது) - வட்டம் - புகைநிறம் - ஹகாரவக்கரம் - உடைய ஆகாயத்தை பிரமரந்திரத் தானத்தில்வைத்து அதன் கடவுளாகிய சதாசிவமூர்த்தியைத் தியானித்தலும்; அவ்வம்மூர்த்திகளை ஆங்காங்கும் தரிசித்தலும், அத்தியானத்தில் அசைவற்றிருந்து சென்று, முத்திக்கபாடம் திறக்க, ஆறாவதாகிய நாதாந்தத்தில் சேறலுமாம்; இவை முறையே மூலாதார முதல் விசுத்திவரை உள்ள ஐந்து ஆதாரத் தானங்கள் என்பர்.
சிவத்தடைந்த சித்தத்தார் - நாதாந்தம் என்னும் ஆறாவது ஆதாரமாய்ப், பிரமரந்திரத் தானத்தின் மேற்பட்ட ஆணை என்றும் தானத்தில் சிவம் பூரணமாய் - மெய்யாய்ப் - பரஞ்சோதியாய்ப் பொலிந்து விளங்குவர். அவரை அங்கு அவ்வாறு தியானித்துத் தரிசித்து அசைவற்று அங்குச் சித்தத்தை நிலைபெற வைத்தவர் என்க. “பேணு தத்துவங்க ளென்னும் பெருகுசோ பான மேறி. ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர்Ó (752) என்றதும் ஆண்டுரைத்தவையும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன. (II-பக்.948); சிவம் - இலயம் போகம் அதிகாரங்களுக்கு மேலாய்ப், புறப்பொருளை நோக்காது பேரறிவு மாத்திரையாய், எங்கும் நிறைவுடையதாய்ச், சத்தாய்ச், சுயஞ்சோதியாகிய ஞானப்பிழ்பாய் நிற்கும் சைதன்னியம்; நிட்களசிவம் என்பர். இவரிருப்பது ஆயிரமிதழ் அமலநிராதார கமல மெனப்படும். பங்கயத்தானங்கள் மூலாதாரம், நாபி, இருதயம், முகம், துவாதசாந்தம் என்பதும் ஓர்வகை.
“பாரணவும் புலனந்தக் கரண மொன்றும் படராமே நடுநாடி பயிலு நாதங், காரணபங் கயன்முதலா மைவர்வாழவுங் கழிவுநெறி வழிபடவுங் கருதி மேலைப், பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கிப் புணர்ந்தணைந்த சிவானுபவ போக மேவுஞ், சீரணவுமவரன்றோ வெம்மையாளுஞ் சித்ததைச் சிவன்பாலே வைத்துளாரேÓ என்னும் புராணசார விளக்கமுங் காண்க.
தாரணை - தரித்தலால் வரும் நிலை. வழி - நெறி; ஞானயோக நெறி; பூரணம் - நிறைவு; வியாபகம்;
காரணபங்கயம் ஐந்தின் கடவுளர் - ஐந்தொழிற்கும் காரண கர்த்தர்களாகிய ஐவரும் சிவத்தின்வழியே போந்து அவராணையின் நிகழ்வார் என்பதாம். இக்கூறிய பிரமன் முதலியோர் பிறந்திறந்துழலும் பசுக் கூட்டத்துட்பட்ட “ஆட்டுத் தேவர்Óகளோடு மயங்கி யறிதற்பாலரல்லர்; “செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ, அத்தனென்றரி யோடு பிரமனும், துத்தியஞ்செய நின்றநற் சோதியேÓ (அரசு - ஆதிபுராணக் குறுந் - 2) என்பன முதலியவை காண்க. இவர்களோ சிவபேதங்களாவர்; சிவனே, படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் பொருட்டு இவ்வடிவங்களை மேற்கொண்டு இப்பதங்களில் அவ்வக் கமலங்களில் வைகுவர் என்பதும், இவ்வடிவங்களைப் பின்வரும் பிரமன் முதலியோர் கொண்டு அவ்வவர்க்கு நியமித்த படைப்பாதி தொழில்களைச் செய்குவர் என்பதும் ஞானநூல்களாலறியப்படும்; “சுரர்முத லியர்திகழ்தரு முயிரவை யவைதம, பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவன்"- (1) "உலகுகள் நிலைபெறு வகை நினை வொடுமிகும், அலைகட னடுவறி துயிலம ரரியுரு வியல்பரன்" (2) "உயி ரவையவை, முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பரன்" (3) என்ற ஆளுடைய பிள்ளையாரது (திருச்சிவபுரம் - திருவிராகம் - நட்டபாடை) தேவாரமும் காண்க.
சிவத்தடைந்த சித்தத்தார் - "சித்தத்தைச் சிவன்பாலே வைததார்" என்று முதனூலிற் போற்றப்பட்டோர்; முன்கூறிய முறைப்படி சிவத்தை யுணர்ந்து, கலந்து, தன்னை மறந்திருக்கும் நிலை; இது சிவயோக சமாதி எனப்படும். இதன் விரிவு சித்தாந்த சாத்திரங்களிலும், காசிகாண்டம், வாயுசங்கிதை முதலிய நூல்களிலும், திருமந்திர முதலாகிய சிவாகமங்களிலும் கண்டுகொள்ளவும், அனுபவமுடைய தேசிகர்கள்பால் உபதேசமுகத்தால் அனுசந்திக்கப்படவும் உரியது; "ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித், தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற; தேடு மிடமதன் றுந்தீபற" உந்தி. (13); "மெய்ம்மைச், சிவயோக மேயோக மல்லாத யோக, மவயோக மென்றே யறி" (களிறு - 74) "ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று, மீதானத் தேசெல்க வுந்தீபற; விமலற் கிடமதென் றுந்தீபற" (உந்தி - 8), "திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற; நேர்பட வங்கேநின்றுந்தீபற" (மேற்படி 17), என்றுவரும் சிவாகமங்களும், "ஒருவழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த், தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டரு டரும்பெரு வெளிக்கே, புக்கழுந்தினர்" (திருவாத - புரா - பெருந். 71); முச்சதுர முதலாதாரங்கள், அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின், முகமார்க்க வமுதுடல முட்டத் தேக்கி, முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள், உகமார்க்க வட்டாங்க யோக முற்று முழத்தல்" (சித்தி. 8-21) என்பனமுதலாக வருவனவும், பிறவும் காண்க.
சித்தத்தார் - அடித்தொண்டின் வழியடைந்தார் - அடித்தொண்டின்வழி - சரியையாதி நானெறி; இவற்றுள் சரியை கிரியை முற்றிச் சிவயோகத்தே வழிவந்தோரே சிவன்பாலே சித்தம் வைத்தற்குரியார் என்பதுமாம்.
ஆரண காரணக் கூத்தர் - இறைவர் தமது கூத்தினாற் சுத்தமாயையினின்றும் வேதங்களைத் தோற்றுவிக்கின்றார் என்பதாம்.
சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம் - பண்பு - ஐம்பெருங் கடவுளரது பதங்களாகிய காரணபங்கயமைந்தும் கடந்து தாரணையாலே பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்து விளங்கும் நாதாந்தத்தில் சித்தம் வைத்துச் சிவத்தையடைந்து நிற்பவர்கள் சித்தத்தை சிவன்பாலே வைத்தார் எனப்பெறுவார்கள்.
கற்பனை :- (1) அட்டாங்க லோகத்தின் வழியேசெய்யப்படும் தாரணையினால் நாதாந்தத்திலே விளங்கும் சிவன்பாலே சித்தத்தினைப் பிறழாமல் நிறுத்துதல் சிவனை அடையும்வழி; (2) இது யோக நெறி.