பாடல் எண் :4160

எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய்
முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்.
1
(இ-ள்) எப்போதும்.....அதிகரித்து - எக்காலத்தும் ஆன்மாக்களுக்கு இனியவராகிய சிவபெருமானது இனிய திருவருளினாலே பெருகி; மெய்ப்போத.....வழுவாமே - உண்மையான சிவாகமஞான நெறிப்படி வந்த விதியின் முறைமைகள் தவறாமல்; அப்போதைக்கப்போதும்....அர்ச்சிப்பார் - அவ்வக்காலந் தோறும் ஆசைமிகும் அன்புடையவர்களாகி முக்காலத்தினும் அருச்சிப்பவர்கள்; முதற் சைவராம் முதல்வர் - ஆதி சைவர்களாகிய முனிவர்கள்.
(வி-ரை) எப்போதும் இனியபிரான் - உயிர்களிடத்தில் நீங்காது எக்காலத்திலும் இனியனவே செய்யும் இறைவர்; சிவபிரான். எப்போதும் - மறந்த காலத்தும், அறியாக்காலத்தும், இகழ்ந்தகாலத்தும் என்றின்னன எல்லாம் கொள்க.
இனிய - இனிமையே செய்யும்; இனிமை - உண்ணின்று நீங்காதுடனிருந்து நன்மை தீமை யறிவுறுத்திக் கண்டுகாட்டி உய்விக்கும் அருள்; “நானேது மறியாமே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்Ó, “எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனேÓ, “என்னி லாரு மெனக்கினி யாரிலை, என்னிலும்மினி யானொரு வன்னுளன்Ó (தேவா). உயிர்களை உய்விக்கும் தொழிலை இடையறாது செய்தருள்பவராதலின் எப்போது மினியபிரான் என்றார்; மலத்திற் கேவலத்திற் கட்டுண்டு கிடந்த உயிர்களைக் கருணைக்கையால் எடுத்து, உடல் கருவி கரணங்களையும் உலகபோகங்களையும் தந்து உயிர்க்குயிராய் உண்ணின்று, உண்மைப் பொருளை அவ்வவற்றின் பக்குவப்படி உணர்த்திச், செலுத்தி, மலபரிபாகம் விளைவித்துத் திருவடிப்பேறாகிய முத்திநெறியிற் செலுத்துதல்ஈண்டுக் கூறப்பட்டது.
பிரான் இன் அருளால் அதிகரித்து - பிரமதேவன் முகத்திற் றோன்றிய மகாசைவர்களாகிய ஏனைய வேதியர் போலல்லாது இவர்கள் முதற்படைப்பிலே சிவபெருமானது ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்ற ஐம்முகங்களின் வழியே சிவசிருட்டியாக உதித்த அகத்தியர், கௌதமர், பாரத்துவாசர், காசிபர், கௌசிகர் என்ற ஐந்து இருடியரின் கோத்திரங்களின் வழியே விருத்தியாகி வழிவழி வருபவர்கள் என்பது; இவ்விருடியர் சிவபெருமான்பால் உபதேசம் பெற்றவர்கள்; இவர்கள் வழிவழி சிவபிரானுக்கே அகம்படித் தொண்டிபுரிபவர்கள். “மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலம்Ó (149) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
மெய்ப்போதநெறி வந்தவிதி - உண்மைஞானமாகிய சிவாகம நெறி; இது சத்தி நிபாதர்க்குணர்த்தும் சிறப்புநூல் விதி. வேதம் உலகர்க்குணர்த்தும் பொதுநூல் விதியாம். மெய்ப்போதம் - சிவாகமம்; நெறி - சரியையாதி நானெறி.
விதிமுறைமையாவது - விதித்த, மந்திரம் - பாவனை - கிரியை என்ற மூன்றானும் வழிபாடு செய்யும் முறை.
ஆர்வம் மிகும் அன்பு - அன்பினை அடிப்படையாகக் கொண்டு முற்றிய ஆசை.
முதற்சைவராம் - சிவன் அநாதி சைவன்; சிவனிடமாக வந்து முதற்றீக்கை பெற்று வழிவழி வருதலின் முதற்சைவர் - ஆதிசைவர் எனப்படுவர்; முனிவர் - மனனசீலர்; புகழ்த்துணை நாயனார் புராணம் பார்க்க.
முப்போதும் - காலை - நண்பகல் - மாலை - என்ற மூன்றுகாலங்கள். “முப்போதும்Ó (வகைநூல்) திரிகால சந்தி என்பது வடமொழி; இந்நிலை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்றினும் ஆகும் படியினை மேல்வரும்பாட்டிற் காண்க. எப்போதும் - முப்போதும் - முற்றும்மைகள். “சந்தி மூன்றினுந் தாபர நிறுத்திÓ (நம்பி - தேவா).